யோசுவா 22:26-34
26
“அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல;
27
மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.
28
“மேலும் நாங்கள், ‘அவர்கள் எப்பொழுதாவது எங்களிடமோ, அல்லது எங்கள் சந்ததிகளிடமோ இப்படிச் சொன்னால், நாங்கள் எங்கள் தந்தையர் கட்டிய யெகோவாவின் பலிபீடத்தின் மாதிரி அமைப்பைப் பாருங்கள்! இது தகன காணிக்கைகளுக்காகவோ அல்லது மற்ற பலிகளுக்காகவோ அல்ல; ஆனால் இது எங்களுக்கும், உங்களுக்கும் ஒரு சாட்சியாகவே கட்டப்பட்டிருக்கிறது என்று பதிலளிப்போம்’ என்று சொல்லி இதைக் கட்டினோம்.
29
“எங்கள் இறைவனாகிய யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தின் முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வதும் அவரைவிட்டு விலகுவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக. இதில் தகன காணிக்கைகளையும், தானியக் காணிக்கைகளையும், மற்றப் பலிகளையும் செலுத்துவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக என்போம்” என்றார்கள்.
30
அப்பொழுது ஆசாரியன் பினெகாசும், சமுதாயத் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களும் ரூபனியர், காத்தியர், மனாசேயினர் ஆகியோர் கூறியதைக் கேட்டதும், மனதில் திருப்தியடைந்தார்கள்.
31
அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.
32
எலெயாசாரின் மகன் ஆசாரியன் பினெகாசும் தலைவர்களும் ரூபனியரையும், காத்தியரையும் சந்தித்துவிட்டு கீலேயாத்திலிருந்து கானானுக்குத் திரும்பிவந்து இஸ்ரயேலரிடம் நடந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்.
33
அவர்கள் கூறியதைக் கேட்டு இஸ்ரயேலர் சந்தோஷப்பட்டு இறைவனுக்குத் துதி செலுத்தினார்கள். ரூபனியரும், காத்தியரும் வாழ்ந்த நாட்டிற்கு விரோதமாகப் படையெடுத்து, அதை அழிப்பதைப்பற்றி பின் ஒருபோதும் அவர்கள் பேசியதில்லை.
34
அப்பொழுது ரூபனியரும், காத்தியரும் அந்த பலிபீடத்திற்கு, “யெகோவாவே இறைவன் என்பதற்கு நமக்கு ஒரு சாட்சி” என்று பெயரிட்டார்கள்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings