Skip to content
யோசுவா 22:1-9

யோசுவா 22:1-9

1
அதன்பின்பு யோசுவா ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரை வரவழைத்து,
2
அவர்களிடம், “யெகோவாவின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியெல்லாம் நீங்கள் செய்து, நான் கட்டளையிட்ட எல்லாவற்றிலும், எனக்கும் கீழ்ப்படிந்தீர்கள்.
3
இன்றுவரை வெகுகாலமாக நீங்கள் உங்கள் சகோதரரை கைவிட்டுவிடவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த பணியை நீங்கள் செய்துமுடித்தீர்கள்.
4
இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா தாம் வாக்களித்தபடியே, உங்கள் சகோதரருக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே யெகோவாவின் அடியவனாகிய மோசே யோர்தானுக்கு அப்பால் உங்களுக்குக் கொடுத்த நாட்டில் இருக்கும் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போங்கள்.
5
ஆனால் யெகோவாவின் அடியவனாகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளையையும் சட்டத்தையும் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்: உங்கள் இறைவனாகிய யெகோவாவை நேசித்து, அவரின் வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருக்குச் சேவை செய்யக் கவனமாய் இருங்கள்” என்றான்.
6
அதன்பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பினான், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
7
மனாசேயின் அரைக் கோத்திரத்திற்கு மோசே பாசானில் நிலத்தைக் கொடுத்திருந்தான். மற்ற அரைக் கோத்திரத்திற்கு யோசுவா யோர்தான் நதியின் மேற்பகுதியில் அவர்களின் சகோதரர்களுடனே நிலம் கொடுத்தான். பின் யோசுவா அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை ஆசீர்வதித்து,
8
“உங்கள் பெருகிய செல்வத்துடன் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகையான மந்தை, வெள்ளி, தங்கம், வெண்கலம், இரும்பு, ஏராளமான உடைகள் ஆகிய கொள்ளைப்பொருட்களை உங்கள் சகோதரர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுங்கள்” என்றான்.
9
எனவே ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோர் கானான் தேசத்தில் உள்ள சீலோ என்னும் இடத்தில் மற்ற இஸ்ரயேலரை விட்டுப்பிரிந்து தங்கள் சொந்த நாடான கீலேயாத்திற்குப் போனார்கள். இது யெகோவாவின் கட்டளைப்படி மோசேயினால் அவர்களுக்குச் சொத்துரிமையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options