யோவான் 12:40-50
40
“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும், தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள். நான் அவர்களை குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.”
41
ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான்.
42
ஆனால் அதிகாரிகளில் பலர், அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் நிமித்தம் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக்குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள்.
43
ஏனெனில் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அவர்கள் விரும்பினார்கள்.
44
அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள்.
45
அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள்.
46
என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் தொடர்ந்து இருளில் இராதபடிக்கே, நான் இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் வந்திருக்கிறேன்.
47
“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் இப்போது நியாயந்தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயந்தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன்.
48
என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு நீதிபதி உண்டு; அது நான் பேசிய இந்த வார்த்தையே ஆகும். அது கடைசி நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும்.
49
ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்லவேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார்.
50
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார்.
Settings