2 சாமுயேல் 12:24-31
24
அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில் அன்புகூர்ந்தார்.
25
யெகோவா அப்பிள்ளையில் அன்பாயிருந்தபடியால், அவர் அப்பிள்ளைக்கு யெதிதியா எனப் பெயரிடும்படி இறைவாக்கு உரைப்பவனான நாத்தான் மூலம் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார்.
26
இந்நாட்களில் யோவாப் அம்மோனியரின் ரப்பா பட்டணத்திற்கு எதிராக சண்டையிட்டு அதைக் கைப்பற்றினான்.
27
அதன்பின் யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பா பட்டணத்துக்கு எதிராகப் போரிட்டு அவர்களின் தண்ணீர் விநியோகிக்கும் பகுதியையும் கைப்பற்றினேன்.
28
நீர் வீரர்களுடன் வந்து பட்டணத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்றும். இல்லையெனில் நான் அதைக் கைப்பற்றும்போது, அது என்னுடைய பெயரால் அழைக்கப்படும்” என்று சொல்லச் சொன்னான்.
29
எனவே தாவீது படை முழுவதையும் திரட்டி ரப்பாவுக்குச் சென்று போரிட்டு அதைக் கைப்பற்றினான்.
30
பின் அம்மோனிய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்துக்கொண்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அந்த மகுடத்தை தாவீதின் தலையில் வைத்தார்கள். அப்பட்டணத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்திரளான பொருட்களை எடுத்துக்கொண்டார்கள்.
31
அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலை செய்வதற்கும், செங்கல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தினான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings