2 இராஜாக்கள் 19:27-37
27
“ ‘ஆனால் நீ எங்கே தங்கியிருக்கிறாய், எப்போது வருகிறாய், போகிறாய் என்பதும், நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.
28
எனக்கு எதிராகக் கோபங்கொண்டு, எனக்குக் காட்டும் அவமதிப்பும் என் காதுகளுக்கு எட்டியது. ஆகையால் என்னுடைய கொக்கியை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியாய் உன்னைத் திரும்பச்செய்வேன்.’
29
“எசேக்கியாவே, இதுவே உனக்கு அடையாளமாய் இருக்கும்: “இந்த வருடம் தானாக விளைகிறதை நீங்கள் சாப்பிடுவீர்கள். இரண்டாம் வருடத்தில் அதன் விதையிலிருந்து முளைப்பதைச் சாப்பிடுவீர்கள். மூன்றாம் வருடத்தில் நீங்களாக விதைத்து, அறுத்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.
30
யூதாவின் வம்சத்தில் தப்பி மீதியாயிருப்பவர்கள் மீண்டும் கீழே வேரூன்றி மேலே கனி கொடுப்பார்கள்.
31
ஏனெனில் எருசலேமிலிருந்து மீதியானவர்களும், சீயோன் மலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கூட்டத்தாரும் வருவார்கள். சேனைகளின் யெகோவாவின் வைராக்கியமே இதை நிறைவேற்றும்.
32
“ஆகையால், அசீரிய அரசனைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: “ ‘அவன் இந்தப் பட்டணத்திற்குள் செல்வதில்லை, இதின்மேல் அம்பை எய்வதுமில்லை. அவன் தனது கேடகத்தைப் பிடித்துக்கொண்டு அதற்குமுன் வருவதுமில்லை, அல்லது அதற்கு விரோதமாக முற்றுகைத்தளம் அமைப்பதுமில்லை.
33
அவன் வந்த வழியாகவே திரும்புவான்; இந்தப் பட்டணத்துக்குள் பிரவேசிக்கமாட்டான் என்று யெகோவா அறிவிக்கிறார்.
34
என் நிமித்தமும், என் அடியவன் தாவீதின் நிமித்தமும் நான் இந்தப் பட்டணத்தைப் பாதுகாத்துக் காப்பாற்றுவேன்.’ ”
35
அந்த இரவே யெகோவாவின் தூதன் வெளியே போய், அசீரியாவின் முகாமிலிருந்த இலட்சத்து எண்பத்தையாயிரம்பேரைக் கொன்றான். மக்கள் அதிகாலையில் எழும்பிப் பார்த்தபோது, வீரர்கள் எல்லோரும் அங்கே பிணமாகக் கிடக்கக் கண்டார்கள்.
36
எனவே அசீரிய அரசனான சனகெரிப் முகாமை அகற்றி, அங்கிருந்து நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.
37
ஒரு நாள், அவன் தனது தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் வணங்கும்போது, அவனுடைய மகன்களான அத்ரமேலேக்கும், சரெத்செரும் அவனை வாளினால் கொலைசெய்துவிட்டு, அரராத் நாட்டிற்குத் தப்பியோடினார்கள். அவனுடைய மகன் எசரத்தோன் அவனுக்குப்பின் அரசனானான்.
Settings