2 நாளாகமம் 9:1-9
1
சாலொமோனின் புகழை சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் அவனை கடினமான கேள்விகளால் சோதிப்பதற்காக எருசலேமுக்கு வந்தாள். அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள்.
2
சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அவன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை.
3
சேபாவின் அரசி சாலொமோனுடைய ஞானத்தையும், அத்துடன் அவன் கட்டியிருந்த அரண்மனையையும்,
4
அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.
5
அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது.
6
ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவேயில்லை. உண்மையிலேயே உமது ஞானத்தின் மேன்மையில் பாதியாகிலும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், நீர் அதிக மேன்மை உடையவராயிருக்கிறீர்.
7
உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும்.
8
உம்மில் பிரியங்கொண்டு, உம்மைத் தமது அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள்.
9
பின்பு அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த வாசனைப் பொருட்களைப்போல, அங்கே ஒருபோதும் அவை இருந்ததில்லை.
Settings