Skip to content
2 நாளாகமம் 9:13-28

2 நாளாகமம் 9:13-28

13
ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள் இருந்தன.
14
இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும் கொண்டுவந்ததைத் தவிர, அரேபியா நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் சாலொமோனுக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள்.
15
சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
16
அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு சேக்கல் எடையுள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான்.
17
அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதை சுத்தமான தங்கத்தகட்டால் மூடினான்.
18
அரியணைக்கு ஆறு படிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட தங்கத்தினால் செய்த ஒரு பாதபடியும் இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது.
19
ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை.
20
சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது.
21
அரசனின் வியாபாரக் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
22
பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான்.
23
பூமியிலுள்ள அரசர்கள் எல்லோரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள்.
24
வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
25
சாலொமோனிடம் குதிரைகளுக்கும், தேர்களுக்கும் 4,000 தொழுவங்கள் இருந்தன. 12,000 குதிரைகளை தேர்ப் பட்டணங்களிலும் அரசன் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான்.
26
அவன் ஐபிராத்து நதிதொடங்கி எகிப்தின் எல்லை மட்டுமுள்ள பெலிஸ்திய நாடுவரையுள்ள எல்லா அரசர்களுக்கும் மேலாக ஆளுகை செய்தான்.
27
அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான்.
28
சாலொமோனுக்கு குதிரைகள் எகிப்திலிருந்தும் மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options