2 நாளாகமம் 10:12-19
12
“மூன்று நாட்களுக்குப்பின் என்னிடம் திரும்பிவாருங்கள்” என்று அரசன் கூறியபடியே நாட்களுக்குப்பின் யெரொபெயாமும் எல்லா மக்களும் ரெகொபெயாமிடம் திரும்பி வந்தார்கள்.
13
அப்போது அரசன் ரெகொபெயாம் அவர்களுக்குக் கடுமையாகப் பதிலளித்தான். முதியோர் அவனுக்குக் கொடுத்த புத்திமதியைத் தள்ளிவிட்டு,
14
வாலிபரின் ஆலோசனையைப் பின்பற்றி மக்களிடம், “என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன்” என்றான்.
15
இப்படியாக அரசன் மக்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் இறைவனிடமிருந்தே வந்தன.
16
அரசன் தங்களுக்கு செவிகொடுக்க மறுத்ததைக் கண்ட எல்லா இஸ்ரயேலரும் அரசனிடம் சொன்னதாவது: “தாவீதிடம் எங்களுக்கு என்ன பங்குண்டு? ஈசாயின் மகனிடம் எங்களுக்கு என்ன பாகமுண்டு? இஸ்ரயேலரே உங்கள் கூடாரங்களுக்குப் போங்கள்! தாவீதே, உன் சொந்த வீட்டைக் கவனித்துக்கொள்!” எனவே எல்லா இஸ்ரயேலரும் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள்.
17
ஆனால் யூதாவில் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரயேலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் எல்லோர்மேலும் இன்னும் ரெகொபெயாம் ஆட்சிசெய்தான்.
18
அரசன் ரெகொபெயாம் கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்த அதோராமை மக்களிடம் அனுப்பினான். ஆனால் இஸ்ரயேலர்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒருவழியாகத் தனது தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடினான்.
19
இவ்வாறு இஸ்ரயேலர் தாவீதின் வீட்டாருக்கெதிராக இந்நாள்வரைக்கும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
Settings