Skip to content
1 கொரிந்தியர் 9:16-27

1 கொரிந்தியர் 9:16-27

16
எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும்.
17
நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன்.
18
அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி.
19
நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன்.
20
யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன்.
21
மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன்.
22
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
23
நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.
24
ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள்.
25
விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம்.
26
ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன்.
27
நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options