உள்ளடக்கத்திற்குச் செல்க

Sorrow பற்றிய பைபிள் வசனங்கள்: Of Mary and Martha

22 வசனங்கள் · 9 அம்சங்கள்

Of Mary and Martha பற்றிய வசனங்கள்

  1. இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் நிமித்தம், மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள்.

  2. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டுப் போனாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

  3. மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் மரித்திருக்கமாட்டான்.

  4. இப்பொழுதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள்.

  5. அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார்.

  6. அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.

  7. அப்பொழுது இயேசு அவளிடம், “உயிரும், உயிர்த்தெழுதலும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கிறவன், மரித்தாலும் உயிர்வாழ்வான்.

  8. உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார்.

  9. அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வருகிற கிறிஸ்து. நான் இதை விசுவாசிக்கிறேன்” என்றாள்.

  10. அவள் இதைச் சொன்னபின்பு திரும்பிப்போய். தன்னுடைய சகோதரி மரியாளை இரகசியமாகக் கூட்டிக்கொண்டுபோய், “போதகர் வந்து இருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள்.

  11. மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் போனாள்.

  12. இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார்.

  13. வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போகிறதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே சென்றார்கள். அவள் அழுவதற்காக கல்லறைக்குப் போகிறாள் என்றே அவர்கள் நினைத்தார்கள்.

  14. இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக்கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள்.

  15. அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் ஆவியில் கலங்கி, துயரமடைந்து,

  16. “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாரும், வந்துபாரும்” என்றார்கள்.

  17. இயேசு கண்ணீர்விட்டார்.

  18. அதைக்கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் லாசருமீது எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள்.

  19. ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவனைச் சாகாமல் காத்திருக்கலாமே?” என்றார்கள்.

  20. இயேசு மீண்டும் துயரமுடையவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

  21. இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்பொழுது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்பொழுது அது நாற்றம் வீசுமே. அங்கே, அவனை வைத்து நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள்.

  22. அப்பொழுது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.