God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள்.
ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார்.
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள்.
யெகோவாவினுடைய பார்வையில் சரியானதையும் நலமானதையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நலமாய் இருப்பீர்கள். நீங்கள் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குப்பண்ணிய அந்த நல்ல நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
அப்பொழுது யெகோவா சொன்னதுபோலவே உங்களுக்கு முன்பாக உங்கள் பகைவர்களைத் துரத்திவிடுவார்.
வருங்காலத்திலே உன்னுடைய மகன் உன்னிடம், “நம்முடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற இந்த ஒழுங்குவிதிகள், விதிமுறைகள், சட்டங்கள், இவைகளின் கருத்து என்ன?” என்று கேட்டால்,
நீ அவனிடம் சொல்லவேண்டியதாவது: “நாங்கள் எகிப்திலே பார்வோனுடைய அடிமைகளாயிருந்தோம். ஆனால் யெகோவா எங்களைத் தமது வலிய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
மேலும், பெரிதும் பயங்கரமுமான, அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் எகிப்தின்மேலும், பார்வோனின்மேலும், அவன் குடும்பத்திலுள்ள யாவர்மேலும் யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாகவே அனுப்பினார்.
ஆனால், இறைவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக, எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
இந்த விதிமுறைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நமது இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்பொழுது நாம் இன்று இருப்பதுபோலவே என்றும் செழிப்புற்று, உயிருடன் காக்கப்படுவோம்.
எங்கள் இறைவனாகிய யெகோவா, நமக்குக் கட்டளையிட்டபடியே அவருக்கு முன்பாக இந்த சட்டம் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிய கவனமாயிருந்தால் அதுவே நமக்கு நீதியாய் இருக்கும்.”
உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிற்குள் உங்களைக் கொண்டுவருவார். அங்கே உங்களுக்கு முன்பாகப் பல நாடுகளை வெளியே துரத்துவார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் பெருத்தவர்களுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டவர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
இவ்விதமாய் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களிடம் ஒப்புக்கொடுத்து, நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கும்போது, நீங்கள் அவர்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவர்களோடு உடன்படிக்கை செய்யவேண்டாம், அவர்களுக்கு இரக்கங்காட்டவேண்டாம்.
ஏனெனில், அவர்கள் மற்ற தெய்வங்களை வழிபடுவதற்காக உங்கள் மகன்களை என்னைப் பின்பற்றுவதிலிருந்து விலகச்செய்வார்கள். அப்பொழுது யெகோவாவின் கோபம் உங்களுக்கு எதிராக மூண்டு உங்களை விரைவாக அழித்துப்போடும்.
ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருமையான உரிமைச்சொத்தாக இருக்கும்படி, அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். பூமியின் மேலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றிலுமிருந்து உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார்.
மற்ற மக்கள் கூட்டங்களைப் பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதற்காக யெகோவா உங்களில் அன்புகூர்ந்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் எல்லா மக்கள் கூட்டங்களிலும் கொஞ்சமாய் இருந்தீர்கள்.
ஆனாலும் யெகோவா உங்கள்மேல் அன்புகூர்ந்தபடியினால்தான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தவும், அவர் உங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும் பார்வோன் அரசனின் அதிகாரத்திலிருந்தும் தமது வல்ல கரத்தினால் விடுவித்து உங்களை மீட்டுக்கொண்டார்.
ஆகையால் உங்கள் இறைவனாகிய யெகோவா மட்டுமே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்; அவரே உண்மையுள்ள இறைவன். அவர் தன்னில் அன்புகூர்ந்து தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தமது அன்பின் உடன்படிக்கையை ஆயிரம் தலைமுறைக்கும் தொடர்ந்து காத்துக்கொள்கிறவர்.
ஆனால், தம்மை வெறுக்கிறவர்களை அழிப்பதன்மூலம் அவர்களுக்கு நேரடியாக பதிலளிப்பார்; தம்மை வெறுக்கிறவர்களை நேரடியாகத் தண்டிப்பதற்கு தாமதிக்கமாட்டார்.
நீங்கள் இந்த சட்டங்களைக் கவனித்து அதைப் பின்பற்ற எச்சரிக்கையாயிருந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்களுடன் செய்துகொண்ட தமது அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்.
அவர் உங்களில் அன்புகூர்ந்து உங்களை ஆசீர்வதித்து, உங்கள் எண்ணிக்கைகளைப் பெருகச்செய்வார். உங்களுக்குக் கொடுப்பதாக, உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டில், உங்களுடைய கர்ப்பத்தின் கனியையும், உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய நிலத்தின் விளைச்சலையும், மாட்டு மந்தையிலுள்ள கன்றுகளையும், ஆட்டு மந்தையிலுள்ள குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
யெகோவா உங்களை எல்லா வியாதிகளிலிருந்தும் காத்துக்கொள்வார். எகிப்தில் நீங்கள் அறிந்திருந்த கொடிய வியாதிகளால் உங்களை வேதனைப்படுத்தமாட்டார்; ஆனால் உங்களை வெறுக்கிறவர்கள்மேல் அவற்றை வரப்பண்ணுவார்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும் நீங்கள் அழிக்கவேண்டும். நீங்கள் அவர்கள்மேல் அனுதாபப்பட வேண்டாம். அவர்களுடைய தெய்வங்களுக்குப் பணிசெய்யவும் வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்குக் கண்ணியாய் இருக்கும்.