God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
“ரேகாபியரின் குடும்பத்தாரிடம் போய், அவர்களை யெகோவாவின் ஆலயத்தின் பக்க அறைகள் ஒன்றிற்கு வரவழைத்து, அவர்களுக்குக் குடிப்பதற்குத் திராட்சரசம் கொடு” என்றார்.
நான் அவர்களை யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தேன். அவர்களை அங்குள்ள இறைவனுடைய மனிதனான இக்தாலியாவின் மகனான ஆனானின் மகன்களுடைய அறைக்குக் கொண்டுபோனேன். அந்த அறை, வாசற்காவலனாகிய சல்லூமின் மகன் மாசெயாவின் அறைக்கு மேலிருந்த, அதிகாரிகளுடைய அறைக்கு அடுத்ததாயிருந்தது.
அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே; நீ யூதா மனிதரிடமும், எருசலேமின் மக்களிடமும் போய் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டீர்களோ? என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களோ?’ என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்.
‘ரேகாபின் மகன் யோனதாப் திராட்சரசம் குடிக்க வேண்டாமென்று தன் மகன்களுக்கு இட்ட கட்டளை கைக்கொள்ளப்படுகிறது. அவர்கள் தங்கள் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தபடியினால், இன்றுவரை அவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லை. ஆனால் நானோ திரும்பத்திரும்ப உங்களுடன் பேசியிருந்தும், நீங்களோ கீழ்ப்படியவில்லை.
நான் இறைவாக்கு உரைக்கும் என்னுடைய எல்லா ஊழியக்காரரையும் உங்களிடம் திரும்பத்திரும்ப அனுப்பினேன். அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவனும் தன்தன் தீமையான வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் சீர்படுத்துங்கள்; அந்நிய தெய்வங்களை வழிபடுவதற்காக அவைகளைப் பின்பற்றவேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்கும் உங்கள் தந்தையர்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நீங்களோ, என் வார்த்தைகளைக் கவனிக்கவுமில்லை, கேட்கவுமில்லை.
ரேகாபின் மகன் யோனதாபின் சந்ததிகள் தங்கள் முற்பிதா தங்களுக்குக் கொடுத்த கட்டளையின்படி நடக்கிறார்கள். ஆனால் இந்த மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.’
“ஆகையால் இஸ்ரயேலின் இறைவனும், சேனைகளின் இறைவனுமாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்! யூதாவின்மேலும், எருசலேமில் வாழும் ஒவ்வொருவர்மேலும் அவர்களுக்கெதிராக நான் அறிவித்த பேராபத்து ஒவ்வொன்றையும் கொண்டுவரப் போகிறேன். நான் அவர்களுடன் பேசினேன். அவர்களோ கேட்கவில்லை; நான் அவர்களை அழைத்தேன். அவர்களோ பதிலளிக்கவில்லை.’ ”
அதன்பின் எரேமியா ரேகாபியரின் குடும்பத்தாரிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘நீங்கள் உங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவனுடைய எல்லா அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, அவனுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டிருக்கிறீர்கள்.’
ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘எனக்குப் பணிசெய்ய ரேகாபின் மகன் யோனதாபிற்கு ஒரு மனிதனாவது ஒருபோதும் இல்லாமல் போவதில்லை’ என்கிறார்” என்றான்.
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த நான்காம் வருடத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது.
“நீ ஒரு புத்தகச்சுருளை எடுத்து, அதிலே யோசியா அரசாண்ட நாள் முதல் இன்றுவரை இஸ்ரயேலையும், யூதாவையும் எல்லா மக்களையும் குறித்து உன்னிடம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளையும் எழுது;
ஒருவேளை யூதா மக்கள் நான் அவர்கள்மீது கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் எல்லா பேராபத்தையும் கேள்விப்படும்போது, ஒவ்வொருவனும் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது நான் அவர்களுடைய கொடுமையையும், பாவத்தையும் மன்னிப்பேன்.”
அப்படியே எரேமியா, நேரியாவின் மகன் பாரூக்கை கூப்பிட்டான். யெகோவா எரேமியாவுக்குக் கூறிய எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச்சொல்ல, பாரூக் அவைகளைப் புத்தகச்சுருளில் எழுதினான்.
எரேமியா பாரூக்கிடம், “நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன்; யெகோவாவின் ஆலயத்திற்குள் எனக்குப் போகமுடியாது.
ஆகவே நீ ஒரு உபவாச நாளன்று யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், நான் சொல்லச்சொல்ல நீ எழுதிய வார்த்தைகளை அந்தப் புத்தகச்சுருளிலிருந்து மக்களுக்கு வாசி. அவைகளைத் தங்கள் பட்டணங்களிலிருந்து வரும் எல்லா யூதா மக்களுக்கும் கேட்கும்படி வாசித்துக் காட்டு.
ஒருவேளை அவர்கள் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் விண்ணப்பங்களைக் கொண்டுவந்து, ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். ஏனெனில் இந்த மக்களுக்கு விரோதமாக யெகோவாவினால் அறிவிக்கப்பட்ட கோபமும், தண்டனையும் பெரிதாயிருக்கிறது.”
இறைவாக்கினன் எரேமியா செய்யச் சொன்ன ஒவ்வொன்றையும் நேரியாவின் மகன் பாரூக் செய்தான். அந்தப் புத்தகத்திலிருந்த யெகோவாவின் வார்த்தைகளை யெகோவாவின் ஆலயத்தில் அவன் வாசித்தான்.
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட ஐந்தாம் வருடம் ஒன்பதாம் மாதத்தில், யெகோவாவுக்கு முன்பாக உபவாசிக்கும் காலம் ஒன்று குறிக்கப்பட்டது. இது எருசலேமில் இருந்த எல்லா மக்களுக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து வந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
செயலாளராகிய சாப்பானின் மகன் கெமரியாவின் அறை, யெகோவாவின் ஆலயத்தின் மேல்முற்றத்தில் உள்ள வாசலின் உட்செல்லும் வழியில் இருந்தது. பாரூக் அங்கிருந்து புத்தகச்சுருளிலிருந்த எரேமியாவின் வார்த்தைகளை ஆலயத்திலிருந்த மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான்.
சாப்பானின் மகனான கெமரியாவின் மகன் மிகாயா, புத்தகத்திலிருந்து வாசித்த யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டான்.
ஆனால் அரசனோ எழுத்தாளனாகிய பாரூக்கையும், இறைவாக்கினன் எரேமியாவையும் கைதுசெய்யும்படி, அரசனின் மகனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் மகன் செராயாவுக்கும், அப்தெயேலின் மகன் செலேமியாவுக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவர்களை யெகோவா மறைத்து வைத்திருந்தார்.
எரேமியா சொல்ல பாரூக் எழுதிய வார்த்தைகளைக் கொண்ட புத்தகச்சுருளை அரசன் எரித்த பின்பு, யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது.
மேலும் நீ யூதா அரசனாகிய யோயாக்கீமிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே; “பாபிலோன் அரசன் வந்து நாட்டை அழித்து, அதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அகற்றிப்போடுவான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே.”
ஆகையால் யூதாவின் அரசனாகிய யோயாக்கீமை குறித்து யெகோவா சொல்வது இதுவே: தாவீதினுடைய அரியணையில் இருந்து அரசாளுவதற்கு அவனுக்கு ஒருவனும் இருக்கமாட்டான். அவனுடைய இறந்த உடல் வெளியில் எறியப்படும். பகற்பொழுதின் சூட்டிலும், இரவின் பனியிலும் கிடக்கும்.