வெளிப்படுத்தல் 17:7-17
7
அப்பொழுது அந்தத் இறைத்தூதன் என்னிடம்: “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவள் ஏறியிருக்கிற ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள மிருகத்தையும் பற்றிய இரகசியத்தை நான் உனக்கு விளக்கிச்சொல்லுவேன்.
8
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும்.
9
“இதை விளங்கிக்கொள்ள ஞானமுள்ள மனம் தேவை. அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கின்ற ஏழு மலைகளாம்.
10
அவை ஏழு அரசர்களாம்; அவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்; ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு, சிறிதுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும்.
11
முன்னே இருந்ததும், இராததுமாகிய அந்த மிருகமே எட்டாவது அரசனாயிருக்கிறது. அவன் அந்த ஏழு அரசர்களுள் ஒருவனான அவனும் அழிந்துவிடுவான்.
12
“நீ கண்ட பத்துக் கொம்புகள் இன்னும் அரசைப் பெற்றுக்கொள்ளாத பத்து அரசர்கள்; ஆனால் அவர்கள் ஒருமணி நேரத்திற்கு அந்த மிருகத்துடனே அரசர்களாக அதிகாரம் பெறுவார்கள்.
13
அவர்கள் ஒரே நோக்குடையவர்களாயிருந்து. அவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14
அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு எதிராக யுத்தம் செய்வார்கள். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் அரசர்களுக்கு அரசருமாய் இருக்கிறபடியால் வெற்றிகொள்வார். அவரோடுகூட இருக்கிறவர்கள் இறைவனால் அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, உண்மையுள்ளவர்களுமாய் இருப்பவர்களும் வெற்றிகொள்வார்கள்” என்றான்.
15
மறுபடியும் அந்தத் இறைத்தூதன் என்னிடம், “அந்த வேசிப்பெண் உட்கார்ந்திருந்த இடத்தில், நீ கண்ட அந்த நீர்த்திரள் மக்கள் கூட்டங்களையும், மக்கள் திரளையும், நாட்டினரையும், மொழியினரையும் குறிக்கின்றன.
16
நீ கண்ட மிருகமும் அந்த பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுக்கின்றன. அவை அவளை அழித்து, அவளை நிர்வாணமாக்கும்; அவை அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
17
ஏனெனில், இறைவன் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படியாக, இந்த எண்ணத்தை அவர்களுடைய இருதயங்களில் கொடுத்தார். அதனாலேயே, அவர்கள் எல்லோரும் அந்த மிருகத்திற்குத் தங்களது ஆட்சிசெய்யும் வல்லமையைக் கொடுக்க உடன்பட்டார்கள். இறைவனுடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும் அவர்களுடைய உடன்பாடு நீடிக்கும்.
Settings