Skip to content
மத்தேயு 8:1-17

மத்தேயு 8:1-17

1
இயேசு மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தார், அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
2
அப்பொழுது ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்து, அவர்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும் என்றான்.”
3
இயேசு தன் கையை நீட்டி அவனைத் தொட்டு. “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்று சொன்னார். உடனே அவன் தனது குஷ்டவியாதியிலிருந்து சுத்தமானான்.
4
அப்பொழுது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்றார்.
5
இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தலைவன் உதவிகேட்டு அவரிடம் வந்து,
6
“ஆண்டவரே, வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான்.
7
இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.”
8
நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக, “ஐயா, நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் குணமடைவான்.
9
ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான்.
10
இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை.
11
நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன்: அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள்.
12
ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார்.
13
அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு ஆகட்டும்” என்றார். அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.
14
இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார்.
15
இயேசு அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
16
மாலை நேரமானபோது, பிசாசு பிடித்திருந்த பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே அந்த தீய ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.
17
“அவர்தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களைச் சுமந்தார்” என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டது இப்படியாக நிறைவேறியது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options