மத்தேயு 24:1-12
1
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள்.
2
ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்குள்ள ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார்.
3
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
4
இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள்.
5
ஏனெனில் ‘நானே கிறிஸ்து,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வருவார்கள். அவர்கள் பலரை ஏமாற்றுவார்கள்.
6
நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு.
7
நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கு விரோதமாய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும்.
8
இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே.
9
“அப்பொழுது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் நிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்படுவீர்கள்.
10
அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். ஒருவரையொருவர் அவர்கள் காட்டிக்கொடுக்கிறவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.
11
அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள்.
12
அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Settings