Skip to content
லூக்கா 22:21-34

லூக்கா 22:21-34

21
ஆனாலும், என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனின் கையோ, சாப்பாட்டுப் பந்தியிலே என் கையுடனேயே இருக்கிறது.
22
நியமிக்கப்பட்டிருக்கிறபடியே மானிடமகனாகிய நான் போகவேண்டும். ஆனால் என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ!” என்றார்.
23
அவர்களோ, தங்களுக்குள்ளே “இதைச் செய்கிறவன் யாராயிருக்கும்?” என்று, தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
24
மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவனாகக் கருதப்படுகிறான் என்பது பற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது.
25
அப்பொழுது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள், தாங்கள் கொடைவள்ளல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.
26
ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்கிறவன், சிறியவனைப்போல் இருக்கவேண்டும். ஆளுகை செய்கிறவனோ, பணிவிடை செய்கிறவனைப்போல் இருக்கவேண்டும்.
27
பந்தியில் உட்கார்ந்திருப்பவனா, அல்லது அதில் பணிசெய்கிறவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணிசெய்கிறவனைப்போல் இருக்கிறேன்.
28
நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள்.
29
என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு அரசை ஏற்படுத்துகிறேன்.
30
இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, பந்தியில் சாப்பிட்டுக் குடிப்பீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள்.
31
“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.
32
ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார்.
33
அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான்.
34
இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options