நியாயாதிபதிகள் 19:15-28
15
எனவே அவர்கள் இரவைக் கழிப்பதற்காக, அப்பட்டணச் சதுக்கத்திற்குப் போயிருந்தார்கள். ஆனால் யாருமே அவர்களைத் தங்கள் வீட்டிற்கு இரவு தங்கும்படி அழைக்கவில்லை.
16
அன்று மாலை நேரத்தில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த, கிபியாவில் வாழும் ஒரு வயது முதிர்ந்தவன் தன் வயல் வேலையை முடித்துவிட்டு வந்தான். அவ்விடத்திலுள்ள மனிதர்கள் பென்யமீனியர்.
17
பட்டணத்து சதுக்கத்தில் வழிப்போக்கர் இருப்பதைக் கண்ட அந்த முதியவன் அவர்களிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
18
அதற்கு அவன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள எங்கள் இருப்பிடத்திற்குப் போக வந்தோம். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குப் போனேன். இப்பொழுது யெகோவாவின் ஆலயத்திற்குப் போகிறேன். என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார் எவருமில்லை.
19
எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும், தீனியும் எங்களிடம் உண்டு. உமது அடியவர்களான எனக்கும், அடியாளுக்கும், எங்களோடிருக்கும் வாலிபனுக்கும் தேவையான உணவும், திராட்சை இரசமும் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” எனப் பதிலளித்தான்.
20
அதற்கு அந்த முதியவன், “உங்களை என் வீட்டிற்கு வரவேற்கிறேன். உங்களுக்குத் தேவையானவற்றை நான் தருகிறேன். ஆனால் இந்தப் பொது சதுக்கத்தில் மட்டும் இரவிலே தங்கவேண்டாம்” எனச் சொன்னான்.
21
அவ்வாறே அவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவனுடைய கழுதைகளுக்குத் தீனி போட்டான். அவர்கள் தங்கள் கால்களைக் கழுவியபின் அவர்களுக்குச் சாப்பிட உணவும் குடிக்க பானமும் கொடுத்தான்.
22
இவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருக்கையில், பட்டணத்திலுள்ள கொடுமையான மனிதர்கள் சிலர் முதியவனின் வீட்டைச் சுற்றிவளைத்தனர். அவர்கள் கதவைப் பலமாக அடித்து, வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் சத்தமாக, “உன்னிடம் வந்த அந்த மனிதனை வெளியே கொண்டுவா; நாங்கள் அவனுடன் பாலுறவு கொள்ளவேண்டும்” எனக் கூப்பிட்டுச் சொன்னார்கள்.
23
வீட்டின் சொந்தக்காரன் வெளியே போய் அவர்களிடம், “இல்லை! என் நண்பர்களே இழிவான இச்செயலை செய்யவேண்டாம். இவன் எனது விருந்தினன். ஆகையால் வெட்கக்கேடான இதைச் செய்யாதீர்கள்.
24
இங்கே கன்னிகையான எனது மகளும், அந்த மனிதனின் வைப்பாட்டியும் இருக்கிறார்கள். இப்பொழுது நான் அவர்களை வெளியே உங்களிடம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களை உங்களுக்கு விருப்பமானபடி செய்யுங்கள். ஆனால் இந்த மனிதனுக்கு இந்த வெட்கக்கேடானதைச் செய்யவேண்டாம்” என்று சொன்னான்.
25
அவன் சொன்னவற்றை அந்த மனிதர்கள் கேட்கவில்லை. எனவே அந்த லேவியன் தனது வைப்பாட்டியைப் பிடித்து வெளியே நின்ற அவர்களிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் இரவு முழுவதும் அவளைக் கற்பழித்து கடுமையாக இம்சைப்படுத்தியபின், அதிகாலையில் அவளைப் போகவிட்டனர்.
26
பொழுது விடியும் நேரத்தில் அப்பெண் லேவியன் இருந்த வீட்டிற்குப்போய் விடியும்வரை அங்கே வாயிற்படியில் விழுந்துகிடந்தாள்.
27
அந்த லேவியன் காலையில் எழுந்து தன் வழியே போவதற்காக வீட்டின் கதவைத் திறந்தான். அப்போது அவனுடைய வைப்பாட்டி வழியின் படியில் தன் இரண்டு கைகளையும் வைத்தவளாக விழுந்து கிடந்ததைக் கண்டான்.
28
அவன் அவளிடம், “எழுந்திரு போவோம்” என்றான். ஆனால் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. எனவே இறந்துபோன அவளது உடலைத் தூக்கித் தன் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனான்.
Settings