யோவான் 5:1-18
1
இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
2
எருசலேமிலே ஆட்டு வாசலின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரெய மொழியிலே பெதஸ்தா என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.
3
அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
4
சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான்.
5
அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான்.
6
இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
7
அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான்.
8
அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார்.
9
உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது.
10
எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள்.
11
அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.
12
எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள்.
13
சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார்.
14
பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார்.
15
அவன் பிறகு புறப்பட்டுப்போய் தன்னை குணமாக்கியது இயேசுவே என்று யூதருக்குச் சொன்னான்.
16
இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள்.
17
இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார்.
18
இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள்.
Settings