Skip to content
யோவேல் 2:18-32

யோவேல் 2:18-32

18
அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு, தமது மக்களில் அனுதாபங்கொள்வார்.
19
யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது: “இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்; நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை நிந்தையாக வைக்கமாட்டேன்.
20
“வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்; பாழடைந்த வறண்ட நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடுவேன். அதன் முன்னணிப் படைகளை கிழக்கே சாக்கடலிலும், அதன் பின்னணிப் படைகளை மேற்கே மத்திய தரைக்கடலிலும் தள்ளுவேன். அங்கே அவற்றின் நாற்றமும் தீய வாடையும் நாட்டின் மேலெழும்பும்.” நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
21
நாடே நீ பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
22
காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்திரத்தின் மேய்ச்சலிடங்கள் பசுமையாகின்றன. மரங்கள் கனி கொடுக்கின்றன; அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாய்ப் பலனளிக்கின்றன.
23
சீயோன் மக்களே, மகிழுங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள். ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார். முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார்.
24
சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்; ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும்.
25
நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும், இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும், வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குப் பதிலாக, உங்களுக்கு ஈடுசெய்வேன்.
26
நீங்கள் திருப்தியாகும்வரை சாப்பிடுவதற்கு உங்களுக்கு உணவு நிறைவாய் இருக்கும். அப்பொழுது உங்களுக்காக அதிசயங்கள் செய்த உங்கள் யெகோவாவாகிய இறைவனின் பெயரைத் துதிப்பீர்கள்; என்னுடைய மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.
27
அப்பொழுது நான் இஸ்ரயேலில் உங்களுடன் இருக்கிறேன் என்றும், உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்றும், வேறொருவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.
28
“அதன்பின்பு, நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்; உங்கள் முதியவர்கள் கனவுகளையும் உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29
மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியைப் பொழிவேன்.
30
வானத்திலும் பூமியிலும் இரத்தமும் நெருப்பும் புகை மண்டலமுமாகிய அதிசயங்களை நான் காண்பிப்பேன்.
31
பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் அந்த நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும், சந்திரன் இரத்தமாக மாறும்.
32
அப்போது யெகோவாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற, யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்; யெகோவா சொன்னதுபோலவே, மீந்திருப்பவர்கள் மத்தியிலிருந்து யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்களுக்கு, சீயோன் மலையிலும் எருசலேமிலும் மீட்பு உண்டு.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options