உண்மையான மனந்திரும்புதலுக்கான அழைப்பு
யோவேல் 2:12-17
12
ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
13
உங்கள் உடைகளையல்ல, உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர்.
14
யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம்.
15
ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள்.
16
மக்களை ஒன்றுசேர்த்து, சபையை பரிசுத்தம் செய்யுங்கள். முதியோரை ஒன்றுகூட்டுங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மணமகன் தன் அறையையும், மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும்.
17
யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக.
Settings