Skip to content
எரேமியா 4:5-18

வடக்கிலிருந்து வரும் உடனடி அச்சுறுத்தல்

எரேமியா 4:5-18
5
“யூதாவில் அறிவித்து, எருசலேமில் பிரசித்தப்படுத்திச் சொல்லுங்கள்: ‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்!’ சத்தமிட்டு: ‘ஒன்றுகூடுங்கள்! பாதுகாப்பான பட்டணங்களுக்கு ஓடுவோம்!’ என்று சொல்லுங்கள்.
6
சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்! பாதுகாப்புக்காக தாமதியாது ஓடுங்கள்! ஏனென்றால் நான் வடக்கிலிருந்து பேராபத்தையும், மிகப்பெரிய அழிவையும் கொண்டுவருகிறேன்.”
7
ஒரு சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறது. நாடுகளை அழிக்கிறவன் புறப்பட்டு விட்டான். உன்னுடைய நாட்டைப் பாழாக்குவதற்காக, தனது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டான். உன்னுடைய பட்டணங்கள் குடியிருப்பவர்கள் இன்றி பாழாய்க்கிடக்கும்.
8
எனவே துக்கவுடை உடுத்துங்கள். அழுது புலம்புங்கள். ஏனெனில் யெகோவாவின் பயங்கர கோபம் எங்களைவிட்டு இன்னும் திரும்பாமல் இருக்கிறதே.
9
அந்த நாளில், “அரசனும், அதிகாரிகளும் மனம் சோர்ந்துபோவார்கள். ஆசாரியர்கள் திகிலடைவார்கள். இறைவாக்கினர் அதிர்ச்சியடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
10
அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! வாள் எங்கள் தொண்டையில் வைக்கப்பட்டிருக்கும்போது, ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்’ என்று கூறி, இந்த மக்களையும், எருசலேமையும் நீர் எவ்வளவாய் ஏமாற்றிவிட்டீர்” என்று கூறினேன்.
11
அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல.
12
அதையும்விட, மிகவும் பலமான ஒரு காற்றாக அது என்னிடமிருந்து வருகிறது. இப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக என் தீர்ப்பை அறிவிக்கிறேன்.”
13
பார்! அவன் மேகங்களைப்போல் முன்னேறி வருகிறான். சுழல் காற்றைப்போன்ற இரதங்களுடனும், கழுகுகளைப் பார்க்கிலும் வேகமான குதிரைகளுடனும் அவன் வருகிறான். எங்களுக்கு ஐயோ கேடு! நாங்கள் அழிந்தோம்!
14
எருசலேமே, உன் இருதயத்திலிருந்து தீமையைக் கழுவி இரட்சிப்பை பெற்றுக்கொள். தீமையான சிந்தனைகளை எவ்வளவு காலத்திற்குத் தேக்கி வைப்பாய்?
15
தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது. எப்பிராயீமின் குன்றுகளிலிருந்து அழிவு வரும் என்று அது பிரசித்தப்படுத்துகிறது.
16
“நாடுகளுக்கு அதைச் சொல்லுங்கள். எருசலேமுக்கு அதைப் பிரசித்தப்படுத்துங்கள். ‘யூதாவின் பட்டணங்களுக்கு எதிராக போர் முழக்கத்தை எழுப்பிக்கொண்டு, முற்றுகையிடும் இராணுவம் ஒன்று தூரமான ஒரு நாட்டிலிருந்து வருகிறது.
17
எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால், ஒரு வயலைக் காவல்காத்து நிற்பதுபோல அந்த இராணுவவீரர் எருசலேமைச் சூழ்ந்துகொள்கிறார்கள்,’ ” என்று யெகோவா சொல்கிறார்.
18
“உன்னுடைய நடத்தையும் செயல்களுமே உன்மீது இவைகளைக் கொண்டுவந்திருக்கின்றன. இதுதான் உன்னுடைய தண்டனை. அது எவ்வளவு கசப்பானது! அது இருதயத்தை எவ்வளவாய் குத்துகிறது!”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options