எரேமியா 32:26-36
26
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
27
“மாம்சமான யாவருக்கும் இறைவனாகிய யெகோவா நானே. என்னால் இயலாதது ஒன்றுண்டோ?
28
ஆகையினால் யெகோவா சொல்வது இதுவே: நான் இப்பட்டணத்தைப் பாபிலோனியரிடமும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடமும் கொடுக்கப்போகிறேன். அவன் அதைக் கைப்பற்றுவான்.
29
இந்தப் பட்டணத்தைத் தாக்குகிற பாபிலோனியர் இதற்குள் புகுந்து, இதற்கு நெருப்பு வைப்பார்கள். வீட்டின் கூரைகளில் பாகாலுக்குத் தூபங்காட்டி, பிற தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்து, எனக்குக் கோபமூட்டிய இம்மக்களின் வீடுகளுடன் இந்த நகரத்தையும் எரித்துப் போடுவார்கள்.
30
“தங்கள் இளமையிலிருந்தே, இஸ்ரயேல், யூதா மக்கள் எனக்கு முன்பாகத் தீமையை அல்லாமல், வேறொன்றும் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்கள் உண்மையிலேயே தங்கள் கைகள் செய்த விக்கிரகங்களினால் எனக்குக் கோபமூட்டினார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
31
இந்தப் பட்டணம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கோபத்தையும், கடுங்கோபத்தையும், மிகுதியாய் எழுப்பியபடியால் அதை என் பார்வையிலிருந்து அகற்றவேண்டும்.
32
இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் தாங்கள் செய்த தீமையினால் எனக்குக் கோபமூட்டினார்கள். அவர்களும், அவர்கள் அரசர்களும், அதிகாரிகளும், ஆசாரியரும், இறைவாக்கினரும், யூதா மனிதரும், எருசலேம் மக்களுமே அப்படிச் செய்தார்கள்.
33
அவர்களோ தங்கள் முகங்களையல்ல; முதுகுகளையே எனக்குக் காட்டினார்கள். நான் திரும்பத்திரும்ப போதித்தும் அதை அவர்கள் கேட்கவோ, திருந்துவதற்கு முயற்சிக்கவோ இல்லை.
34
அவர்கள் என் பெயரினால் அழைக்கப்படும் ஆலயத்தில், தங்கள் அருவருப்பான விக்கிரகங்களை வைத்து ஆலயத்தைக் கறைப்படுத்தினார்கள்.
35
அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் மோளேகு தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக பென் இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். இத்தகைய அருவருப்பான செயல்களைச் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதுமில்லை; அப்படி நான் என் மனதில் எண்ணியதுமில்லை. இருந்தும் அவர்கள் இப்படிச் செய்து யூதாவைப் பாவத்திற்குட்படுத்தினார்கள்.
36
“எரேமியாவே, ‘இப்பட்டணம் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்படும்’ என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனாலும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அந்நாட்டைப் பற்றி இன்னும் அதிகமாய்ச் சொல்வது இதுவே:
Settings