Skip to content
யாத்திராகமம் 8:16-28

யாத்திராகமம் 8:16-28

16
பின்பு யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம், நீ உன் கோலை நீட்டி நிலத்தின் புழுதியை அடி. அப்பொழுது எகிப்து நாடு எங்குமுள்ள புழுதி பேன்களாக மாறும் என்று சொல்” என்றார்.
17
அவர்கள் அப்படியே செய்தார்கள். ஆரோன் கோலைப் பிடித்திருந்த தன் கையை நீட்டி நிலத்தின் புழுதியை அடித்ததும், மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் பேன்கள் வந்தன. எகிப்து நாட்டின் புழுதியெல்லாம் பேன்களாக மாறிற்று.
18
ஆனால் மந்திரவாதிகள், தங்கள் மாயவித்தைகளினால் பேன்களை உண்டுபண்ண முயன்றபோது, அவர்களால் முடியாது போயிற்று. மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் பேன்கள் இருந்தன.
19
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனிடம், “இது இறைவனின் விரலேதான்” என்றார்கள். ஆனாலும் யெகோவா சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினமாகி, அவர்களுக்கு அவன் செவிகொடுக்கவில்லை.
20
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ அதிகாலையில் எழுந்து பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது அவனுக்கு முன்பாக நின்று அவனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு, என் மக்களைப் போகவிடு.
21
என் மக்களைப் போகவிடாவிட்டால் உன்மேலும், உன் அதிகாரிகள்மேலும், உன் மக்கள்மேலும், உன் வீட்டிற்குள்ளும் வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியருடைய வீடுகள் வண்டுகளால் நிறைந்திருக்கும். அவர்கள் வாழும் நிலமும் அவைகளால் நிறைந்திருக்கும்.
22
“ ‘ஆனாலும் என் மக்கள் வாழும் கோசேன் நாட்டையோ, அந்த நாளில் நான் வித்தியாசமாக நடத்துவேன்; அங்கு வண்டுகள் இராது, அதனால் யெகோவாவாகிய நான் இந்த நாட்டில் இருக்கிறேன் என்பதை நீ அறிந்துகொள்வாய்.
23
இவ்வாறு என் மக்களுக்கும், உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுத்துவேன். இந்த அற்புத அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.
24
யெகோவா அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனுடைய அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும் திரளான வண்டுகள் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் போயிற்று.
25
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “நீங்கள் போய் உங்கள் இறைவனுக்கு பலி செலுத்துங்கள். இந்த நாட்டிலேயே அதைச் செலுத்துங்கள்” என்றான்.
26
அதற்கு மோசே, “நாங்கள் அப்படிச் செய்வது சரியல்ல; ஏனெனில் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் செலுத்தும் பலிகள் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும். அப்படி அவர்கள் பார்வையில் அருவருப்பாயிருக்கிற பலிகளை நாங்கள் செலுத்தினால், அவர்கள் எங்கள்மேல் கல்லெறியாமல் விடுவார்களோ?
27
எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அவருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பிரயாணமாய்ப் பாலைவனத்திற்குப் போகவேண்டும்” என்றான்.
28
அப்பொழுது பார்வோன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பாலைவனத்தில் பலிசெலுத்தும்படி, நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால் நீங்கள் அதிக தூரம் போகக்கூடாது. இப்பொழுது எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options