Skip to content
யாத்திராகமம் 4:1-13

யாத்திராகமம் 4:1-13

1
மோசே மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘யெகோவா உனக்கு காட்சி அளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றான்.
2
அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். “ஒரு கோல்” என்றான்.
3
“அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார். மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான்.
4
அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது.
5
“ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி இதுவே அடையாளம்” என்று யெகோவா சொன்னார்.
6
மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது.
7
“இப்பொழுது திரும்ப உனது கையை மேலங்கிக்குள் வை” என்றார். அப்படியே மோசே, மறுபடியும் அங்கிக்குள் கையை வைத்தான். திரும்பவும் கையை வெளியே எடுத்தபோது, அது சுகமடைந்து உடலின் மற்ற பகுதிகளைப்போல் மாறினது.
8
பின்பு யெகோவா, “அவர்கள் உன்னை நம்பாமல் அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும், இரண்டாவதை நம்பக்கூடும்.
9
இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமல் அல்லது உனக்குச் செவிகொடுக்காமல் போனால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதைக் காய்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கிற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார்.
10
அதற்கு மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியானுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத்திறன் உடையவனாய் இருக்கவில்லை; என் வாய் திக்கும், என் நாவு குழறும்.”
11
அப்பொழுது யெகோவா அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை ஊமையாகவோ செவிடாகவோ ஆக்குகிறவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, அவனைக் குருடனாக்குவதோ யார்? யெகோவாவாகிய நான் அல்லவா?
12
இப்பொழுதே நீ போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவிசெய்து, நீ சொல்ல வேண்டியதையும் உனக்குப் போதிப்பேன்” என்றார்.
13
அதற்கு மோசேயோ, “யெகோவாவே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பும்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options