யாத்திராகமம் 29:1-26
1
“அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்வதற்கு நீ செய்யவேண்டியது இதுவே: குறைபாடற்ற ஒரு இளங்காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
2
சிறந்த கோதுமை மாவினால் புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துப் பிசைந்த அடை அப்பங்களையும், எண்ணெய் கலந்த அதிரசங்களையும் செய்யவேண்டும்.
3
அவற்றை ஒரு கூடையில் வைத்து, அந்தக் காளையுடனும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களுடனும் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும்.
4
பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவவேண்டும்.
5
உடைகளை எடுத்து, உள் அங்கி, ஏபோத்துடன் அணியும் அங்கி, ஏபோத், மார்பு அணி ஆகியவற்றை ஆரோனுக்கு உடுத்தவேண்டும். அத்துடன் திறமையாய் நெய்யப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டவேண்டும்.
6
அவனுடைய தலையில் தலைப்பாகையையும் அணிவித்து, அதன்மேல் பரிசுத்த தங்கக்கீரிடத்தையும் வைக்கவேண்டும்.
7
பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.
8
அதன்பின், அவனுடைய மகன்களை வரவழைத்து, அவர்களுக்கும் உள் அங்கிகளை அணிவிக்கவேண்டும்.
9
அவர்களுக்கும் குல்லாக்களை அணியவேண்டும். பின் இடைப்பட்டிகளை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கட்டவேண்டும். ஆசாரியத்துவம் ஒரு நிரந்தர நியமத்தினால் அவர்களுக்கு உரியதாயிருக்கிறது. “இவ்விதமாக ஆரோனையும், அவன் மகன்களையும் நீ அர்ப்பணிக்கவேண்டும்.
10
“அதன்பின் சபைக் கூடாரத்தின் முன்பாக காளையைக் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைக்கவேண்டும்.
11
பின் சபைக் கூடாரத்தின் வாசலில் யெகோவா முன்னிலையில் அக்காளையை கொல்லவேண்டும்.
12
அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, உன் கை விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மிஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும்.
13
பின்பு அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்புகள் அனைத்தையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதன் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
14
ஆனால் காளையின் இறைச்சியும், தோலும், குடலும் முகாமுக்கு வெளியே எரிக்கப்படவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
15
“அதன்பின் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அதன் தலைமேல் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.
16
பின்பு அதைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
17
அந்த செம்மறியாட்டுக் கடாவை துண்டங்களாக வெட்டி, அதன் உட்பாகங்களையும், கால்களையும் கழுவி, அவற்றை மற்ற இறைச்சித் துண்டுகளுடனும், அதன் தலையுடனும் வைக்கவேண்டும்.
18
அதன்பின் செம்மறியாடுகள் முழுவதையும் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகும்.
19
“பின்பு மற்ற செம்மறியாட்டுக் கடாவையும் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவன் மகன்களும் அதன்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.
20
அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
21
பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மேலும் அவன் உடைகளின்மேலும், அவன் மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளிக்கவேண்டும். அதன்பின் அவனும், அவன் மகன்களும் அர்ப்பணிக்கப்படுவார்கள். அவர்களுடைய உடைகளும் அர்ப்பணிக்கப்படும்.
22
“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுத்த வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலது தொடையையும் எடுக்கவேண்டும். இதுவே ஆரோனுடைய அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடா.
23
அவற்றுடன் யெகோவா முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
24
அவற்றையெல்லாம் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய கைகளில் கொடுத்து, அவற்றை யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
25
பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும்.
26
ஆரோனின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவின் நெஞ்சுப்பகுதியை எடுத்து, பின்பு அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். இது உன் பங்காயிருக்கும்.
Settings