யாத்திராகமம் 25:23-40
23
“மேலும் சித்தீம் மரத்தினால் ஒரு மேஜையைச் செய்யவேண்டும். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருக்கவேண்டும்.
24
அதைச் சுத்தமான தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும்.
25
அத்துடன் அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை இணை.
26
மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்து.
27
மேஜையைத் தூக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கம்புகளைப் பிடிக்கும்படி, அந்த வளையங்கள் விளிம்புச் சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
28
அக்கம்புகளை சித்தீம் மரத்தால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும். அவற்றினாலேயே இந்த மேஜையைச் சுமக்கவேண்டும்.
29
மேஜையின் தட்டுகளையும், கிண்ணங்களையும் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும். அத்துடன் பானகாணிக்கைகளை ஊற்றுவதற்கான கிண்ணங்களையும், ஜாடிகளையும் தங்கத் தகட்டினாலேயே செய்யவேண்டும்.
30
இறைசமுக அப்பம் எப்பொழுதும் எனக்கு முன்னாக இருக்கும்படி அதை இந்த மேஜையின்மேல் வை.
31
“சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்யவேண்டும். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே செய்யப்படவேண்டும்.
32
ஆறு கிளைகள் குத்துவிளக்கின் பக்கங்களிலிருந்து விரிந்து தோன்றவேண்டும். மூன்று கிளைகள் ஒரு பக்கத்திலும், மூன்று கிளைகள் மறுபக்கத்திலும் இருக்கவேண்டும்.
33
ஒரு கிளையில் வாதுமை பூக்கள் வடிவமான மூன்று கிண்ணங்கள் அதன் மொட்டுகளுடனும், மலர்களுடனும் இருக்கவேண்டும். அப்படியே அடுத்த கிளையிலும் மூன்று கிண்ணங்கள் இருக்கவேண்டும். இவ்விதமாக அந்த குத்துவிளக்கிலிருந்து விரிந்துபோகும் ஆறுகிளைகளிலும் இருக்கவேண்டும்.
34
குத்துவிளக்கின் உச்சியில் வாதுமைப் பூக்களைப் போன்ற நான்கு கிண்ணங்கள் அவற்றின் மொட்டுகளோடும், மலர்களோடும் இருக்கவேண்டும்.
35
குத்துவிளக்கிலிருந்து விரியும், முதல் ஜோடிக்கிளைகளுக்குக் கீழே, ஒரு மொட்டு இருக்கவேண்டும். இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டு இருக்கவேண்டும். மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டு இருக்கவேண்டும். எல்லாமுமாக ஆறு கிளைகள் இருக்கவேண்டும்.
36
மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் சுத்தத் தங்கத்தின் ஒரே தகட்டிலிருந்து அடித்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
37
“பின்பு அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்து, குத்துவிளக்கின் முன்பக்கத்தில் வெளிச்சம் தரக்கூடியதாக, அவற்றை குத்துவிளக்கின் மேல் வை.
38
விளக்குத்திரி கத்தரிகளும், தட்டுகளும் சுத்தத் தங்கத்தினால் செய்யப்படவேண்டும்.
39
குத்துவிளக்கையும், அதற்குரிய உபகரணங்கள் யாவற்றையும் செய்ய ஒரு தாலந்து சுத்தத்தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
40
இங்கே மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே, இவைகளையெல்லாம் செய்யும்படி நீ கவனமாயிரு.”
Settings