2 நாளாகமம் 32:1-8
1
எசேக்கியா இவையெல்லாவற்றையும் உண்மையுடன் செய்துமுடித்தான். பின் அசீரியாவின் அரசன் சனகெரிப் வந்து யூதாவின்மேல் படையெடுத்தான். அவன் அரண்செய்யப்பட்ட பட்டணங்களை வெற்றிகொள்ள எண்ணி அவற்றை முற்றுகையிட்டான்.
2
சனகெரிப் வந்திருப்பதையும், அவன் எருசலேமின்மேல் யுத்தம் செய்ய நோக்கம் கொண்டிருப்பதையும் எசேக்கியா கண்டான்.
3
அப்பொழுது அவன் தனது அலுவலர்களுடனும், இராணுவ அதிகாரிகளுடனும் பட்டணத்திற்கு வெளியேயுள்ள நீரூற்றுக்களைத் தடைசெய்வதுபற்றி கலந்தாலோசித்தான். அவர்களும் அவனுக்கு உதவினார்கள்.
4
மனிதர் திரளாய் ஒன்றுகூடி வந்து, எல்லா நீரூற்றுகளையும் நாட்டின் வழியாக ஓடிய நீரோடைகளையும் தடுத்து நிறுத்தினார்கள். “அசீரிய அரசர்கள் வந்து ஏன் நிறைந்த தண்ணீரின் செழிப்பைக் கண்டுகொள்ளவேண்டும்” என்று சொல்லியே அவர்கள் இப்படிச் செய்தார்கள்.
5
அதன்பின் அவன் கடும் முயற்சியுடன் மதில்களின் உடைந்த பகுதிகளையெல்லாம் திருத்தி மதிலின்மேல் கோபுரங்களையும் கட்டினான். அவன் அந்த மதிலுக்கு வெளியே வேறு ஒரு மதிலையும் கட்டி தாவீதின் பட்டணத்தில் ஆதார தளவரிசைகளையும் பலப்படுத்தினான். அத்துடன் அவன் ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்திருந்தான்.
6
அவன் மக்களுக்கு மேலாக இராணுவ அதிகாரிகளையும் நியமித்தான். அவர்களை அவனுக்கு முன்பாக பட்டண வாசலிலுள்ள வீதியில் ஒன்றுகூட்டி, தைரியமூட்டும் வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினான்.
7
“பலங்கொண்டு தைரியமாயிருங்கள். அசீரிய அரசனையும், அவனுடனிருக்கும் பெரும் இராணுவத்தையும் கண்டு நீங்கள் பயப்படவோ, மனஞ்சோரவோ வேண்டாம். ஏனெனில் அவனுடன் இருக்கும் படையைவிட மிகப்பெரிய வல்லமை நம்முடன் இருக்கிறது.
8
அவனுடன் இருப்பது மாம்ச புயமே, ஆனால் நமக்கு உதவிசெய்யவும், நம்மோடு யுத்தத்தில் சண்டையிடவும் இறைவனாகிய யெகோவா நம்முடன் இருக்கிறார்” என்றான். யூதாவின் அரசன் எசேக்கியா சொன்னவற்றைக் கேட்டு மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.
Settings