Skip to content
2 நாளாகமம் 24:4-14

2 நாளாகமம் 24:4-14

4
சிறிது காலத்தின்பின் யோவாஸ் யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தான்.
5
அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒன்றாக அழைத்து அவர்களிடம், “யூதாவின் பட்டணங்களுக்குப் போய் உங்கள் இறைவனின் ஆலயத்தைத் திருத்துவதற்கு இஸ்ரயேலரிடமிருந்து வருடாவருடம் கொடுக்கப்படவேண்டிய பணத்தைச் சேகரியுங்கள். அதை இப்பொழுதே செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்களோ உடனே செயல்படவில்லை.
6
ஆகவே அரசன் பிரதான ஆசாரியன் யோய்தாவை அழைப்பித்து அவனிடம், “யெகோவாவின் அடியவன் மோசேயினாலும், இஸ்ரயேல் சபையாலும் சாட்சிக் கூடாரத்திற்கென நியமிக்கப்பட்ட வரியை யூதாவிடத்திலும் எருசலேமிடத்திலும் இருந்து வாங்கிவரும்படி, நீர் ஏன் லேவியர்களை விசாரிக்கவில்லை?” என்று கேட்டான்.
7
அந்த கொடியவளான அத்தாலியாளின் மகன்கள் இறைவனின் ஆலயத்தை உடைத்து, யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் இருந்த பரிசுத்த பொருட்களைக்கூட பாகாலுக்குப் கொடுத்திருந்தார்கள்.
8
எனவே அரசனின் கட்டளைப்படி பெரிய பெட்டியொன்றைச் செய்து யெகோவாவின் ஆலய வாசலில் வெளியே வைத்தார்கள்.
9
பாலைவனத்தில் இறைவனின் அடியவனாகிய மோசே இஸ்ரயேலரிடம் கேட்டுக்கொண்டபடி யெகோவாவுக்கென வரி கொண்டுவரப்பட வேண்டுமென்ற ஒரு அறிவித்தல் யூதாவிலும், எருசலேமிலும் பிரசித்தப்படுத்தப்பட்டது.
10
எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் தங்கள் கொடைகளை மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து அந்தப் பெட்டி நிரம்பும்வரை அதற்குள் போட்டார்கள்.
11
அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள்.
12
அரசனும், யோய்தாவும் அப்பணத்தை யெகோவாவின் ஆலயத்திற்கு வேண்டிய வேலைசெய்யும் மனிதர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கென சிற்பிகளையும், தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் ஆலயத்தைத் திருத்துவதற்கான இரும்பு வேலை, வெண்கல வேலை பார்ப்போரையும்கூட கூலிக்கு அமர்த்தினார்கள்.
13
வேலைக்குப் பொறுப்பாய் இருந்த மனிதர் கடும் உழைப்பாளிகளாய் இருந்தார்கள். அவர்களின் மேற்பார்வையில் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. அவர்கள் இறைவனின் ஆலயத்தை அதன் முந்திய வரைபடத்தின்படி திரும்பவும் கட்டி வலுவுள்ளதாய் அமைத்தார்கள்.
14
ஆலய வேலைகளை முடித்தபோது, உடனே அவர்கள் மிகுதியாயிருந்த பணத்தை அரசனிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்தார்கள். அதைக்கொண்டு யெகோவாவின் ஆலயத்திற்கென பொருட்கள் செய்யப்பட்டன. யெகோவாவினுடைய ஆராதனைக்கும், தகன காணிக்கைக்கும் உரிய பொருட்களும், அத்துடன் கிண்ணங்களும், மற்றும், தங்கம், வெள்ளி ஆகியவற்றாலான பொருட்களும் செய்யப்பட்டன. யோய்தா வாழ்ந்த நாட்களெல்லாம் யெகோவாவினுடைய ஆலயத்தில் தொடர்ச்சியாக தகன காணிக்கைகள் செலுத்தப்பட்டன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options