2 நாளாகமம் 18:18-27
18
தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், அவரது வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் நிற்பதையும் நான் கண்டேன்.
19
அப்பொழுது யெகோவா அந்த சேனையிடம், ‘இஸ்ரயேலின் அரசன் ஆகாபை, கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே அவன் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின.
20
கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. “ ‘எவ்விதமாக?’ என்று யெகோவா கேட்டார்.
21
“ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார்.
22
“அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர்களின் வாய்களில் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான்.
23
அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான்.
24
அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான்.
25
அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய்,
26
அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான்.
27
அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான்.
Settings