Skip to content
1 இராஜாக்கள் 20:21-34

1 இராஜாக்கள் 20:21-34

21
இஸ்ரயேல் அரசன் முன்னேறிச் சென்று அவர்களின் குதிரைகளையும், தேர்களையும் மேற்கொண்டு சீரிய இராணுவத்துக்கு பெரும் இழப்பை விளைவித்தான்.
22
இதன்பின்பு இறைவாக்கினன், இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “உன்னுடைய நிலையை பெலப்படுத்திக்கொள், இனி நீ என்ன செய்யவேண்டுமென்று யோசித்துப்பார். ஏனென்றால் அடுத்த வசந்தகாலத்தில் சீரிய அரசன் உன்னைத் திரும்பவும் தாக்குவான்” என்றான்.
23
இதற்கிடையில் சீரிய அரசனின் அலுவலர்கள் அரசனிடம் வந்து, “அவர்களுடைய தெய்வங்கள் மலைகளின் தெய்வங்கள். அதனால்தான் அவர்களை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் சமபூமியில் அவர்களுடன் சண்டையிட்டால் நிச்சயமாய் அவர்களைவிட பலமுள்ளவர்களாயிருப்போம்.
24
ஆகவே இப்படிச் செய்யும், எல்லா அரசர்களையும், அவர்களுடைய தலைமைப் பதவிகளிலிருந்து விலக்கி, அவர்களுக்குப் பதிலாக அவர்களின் இடங்களில் வேறு அதிகாரிகளை நியமியும்.
25
நாங்கள் சமபூமியில் இஸ்ரயேலருடன் யுத்தம் செய்யும்படியாக, நீர் இழந்த இராணுவத்தைப்போல் குதிரைக்குக் குதிரையும், தேருக்கு தேருமாக ஒரு இராணுவத்தை உருவாக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களைப்பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருப்போம்” என்று ஆலோசனை கொடுத்தார்கள். அரசன் அதற்கு உடன்பட்டு அதன்படியே நடந்தான்.
26
அடுத்த வசந்தகாலத்தில் பெனாதாத் சீரியரைச் சேர்த்துக்கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகச் சண்டையிடும்படி ஆப்பெக் வரையும் போனான்.
27
இஸ்ரயேலரும் படை திரட்டிக்கொண்டு உணவுப் பொருட்களுடன் அவர்களை எதிர்க்க அணிவகுத்துச் சென்றனர். இஸ்ரயேலர் அவர்களுக்கெதிரில் இரு சிறிய வெள்ளாட்டு மந்தைகளைப்போல முகாம் அமைத்து இருந்தார்கள். சீரியரோ நாடு முழுவதிலும் நிரம்பியிருந்தார்கள்.
28
இறைவனுடைய மனிதன் இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘யெகோவாவே மலைகளின் தெய்வம் என்றும், பள்ளத்தாக்கின் தெய்வம் அல்ல என்றும் சீரியா நினைப்பதால் இந்தப் பெரும் படையை உன் கையில் கொடுப்பேன். அதனால் நீயும் நானே யெகோவா என்று அறிந்துகொள்வாய்’ என்கிறார்” என்றான்.
29
ஏழு நாட்களாக இரு படைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமாக முகாம் அமைத்திருந்து, ஏழாம்நாளில் யுத்தத்தைத் தொடங்கினர். இஸ்ரயேலர் ஒரு நாளிலேயே ஒரு இலட்சம் சீரிய காலாட்படை வீரரைக் கொன்றனர்.
30
அவர்களில் மீதியானோர் ஆப்பெக் நகரத்துக்குத் தப்பியோடினர். அங்கே அவர்களில் இருபத்தி ஏழாயிரம்பேர் பட்டண மதில் இடிந்து விழுந்ததினால் அழிந்தார்கள். பெனாதாத் பட்டணத்துக்குள் தப்பியோடி, உள்ளறை ஒன்றில் ஒளித்திருந்தான்.
31
அவனுடைய அதிகாரிகள் அவனைப் பார்த்து, “இஸ்ரயேல் அரசர்கள் மிகவும் இரக்கமுள்ளவர்களென்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் அரையில் துக்கவுடை உடுத்திக்கொண்டு தலையில் கயிறுகளையும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் போய்ப் பார்ப்போம். சில வேளை அவன் உம்மை உயிரோடு இருக்கவிடுவான்” என்றார்கள்.
32
அவ்வாறே அவர்கள் அரைகளில் துக்கவுடையையும், தலைகளில் கயிறுகளையும் கட்டிக்கொண்டு, இஸ்ரயேல் அரசனிடம் போய், “தயவுசெய்து என்னை உயிருடன் வாழவிடும் என்று உம்முடைய அடியவனாகிய பெனாதாத் கேட்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவன் இன்னும் உயிரோடிருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான்.
33
அந்த மனிதர் இதை ஒரு நல்ல அடையாளமாக எண்ணி, அவன் சொன்ன வார்த்தையின்படியே, “ஆம் உம்முடைய சகோதரன் பெனாதாத் உயிரோடிருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது இஸ்ரயேல் அரசன், “போய் அவனைக் கொண்டுவாருங்கள்” என்றான். பெனாதாத் வெளியே வந்ததும் தனது தேருக்குள் அவனை ஏற்றினான்.
34
பெனாதாத் ஆகாபிடம், “என் தகப்பன் உமது தகப்பனிடமிருந்து கைப்பற்றிய பட்டணங்களெல்லாவற்றையும் நான் உமக்குத் திரும்பத் தருவேன். என் தகப்பன் சமாரியாவில் சந்தைப் பகுதிகளை அமைத்ததுபோல நீரும் தமஸ்குவில் சந்தைப் பகுதிகளை அமைக்கலாம்” என்றான். அதற்கு ஆகாப், “ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் நான் உன்னைப் போகவிடுகிறேன்” என்றான். எனவே ஆகாப் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவனைப் போகவிட்டான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options