Skip to content

Man பற்றிய பைபிள் வசனங்கள்

106 வசனங்கள் · 114 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார்.

  2. அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார், இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

  3. அப்பொழுது இறைவனாகிய யெகோவா எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா ஆகாயத்துப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கியிருந்தார். மனிதன் அவற்றுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவர் அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; மனிதன் ஒவ்வொரு உயிரினத்தையும் எப்படி அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று.

  4. இவ்வாறு மனிதன் எல்லா வளர்ப்பு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். ஆனால் ஆதாமுக்கோ தகுந்த துணை இன்னமும் காணப்படவில்லை.

  5. எனவே இறைவனாகிய யெகோவா மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார்; அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார்.

  6. பின்பு இறைவனாகிய யெகோவா, தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.

  7. அப்பொழுது மனிதன் சொன்னான்: “இவள் என் எலும்பின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.”

  8. இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.

  9. ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

  10. இறைவனாகிய யெகோவா உண்டாக்கியிருந்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட, பாம்பு அதிக தந்திரமுள்ளதாய் இருந்தது. பாம்பு அப்பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள எந்த ஒரு மரத்திலிருந்தும் சாப்பிடவேண்டாம் என்று இறைவன் உங்களுக்குச் சொன்னாரோ?” எனக் கேட்டது.

  11. அதற்கு அந்தப் பெண் பாம்பிடம், “தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்;

  12. ஆனால் இறைவன், ‘நீங்கள் தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்திலிருந்து பழத்தை சாப்பிடக்கூடாது, அதைத் தொடவும் கூடாது, மீறினால் சாவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றாள்.

  13. அதற்குப் பாம்பு அந்தப் பெண்ணிடம், “நிச்சயமாக நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்று சொன்னது.

  14. “ஏனெனில் அந்த மரத்திலிருந்து சாப்பிடும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் இறைவனைப் போலாகி, நன்மையையும் தீமையையும் அறிவீர்கள் என்பது இறைவனுக்குத் தெரியும்” என்றது.

  15. அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதாயும், பார்வைக்கு அழகானதாயும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாயும் இருக்கக் கண்டாள்; அவள் அதின் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். பின்பு அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் சாப்பிடக் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான்.

  16. பிறகு அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, முன்னர் அறிந்திராத விஷயங்களை அறிந்துகொண்டார்கள்; அப்பொழுது தாங்கள் இருவரும் நிர்வாணிகளாய் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே அவர்கள் அத்தியிலைகளைத் தைத்துத் தங்களை மூடிக்கொண்டார்கள்.

  17. அன்று மாலை தென்றல் காற்று வீசிய வேளையில், இறைவனாகிய யெகோவா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சத்தத்தை மனிதனும் அவன் மனைவியும் கேட்டார்கள்; உடனே அவர்கள் தோட்டத்தின் மரங்களுக்கு இடையில் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து ஒளிந்துகொண்டார்கள்.

  18. ஆனாலும் இறைவனாகிய யெகோவா மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.

  19. அதற்கு அவன், “நான் தோட்டத்தில் உமது சத்தத்தைக் கேட்டேன்; நான் நிர்வாணியாய் இருந்தபடியால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான்.

  20. அதற்கு யெகோவா, “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிட வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ சாப்பிட்டாயோ?” என்று கேட்டார்.

  21. அதற்கு மனிதன், “என்னுடன் இங்கு இருப்பதற்கு நீர் எனக்குத் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள்; நான் சாப்பிட்டேன்” என்றான்.

  22. அதன்பின்பு அவர் பெண்ணிடம் சொன்னதாவது: “உன் குழந்தைபேற்றின் வேதனையை அதிகமாய்க் கூட்டுவேன்; வேதனையோடு நீ குழந்தைகளைப் பெறுவாய்; உன் ஆசை உன் கணவன் மேலேயே இருக்கும், அவன் உன்னை ஆண்டு நடத்துவான்.”

  23. அவர் ஆதாமிடம் சொன்னதாவது: “ ‘நீ சாப்பிடவேண்டாம்,’ என நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உன் மனைவியின் சொல்லைக் கேட்டுச் சாப்பிட்டபடியினால், “உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்; உன் வாழ்நாளெல்லாம் நீ வருந்தி உழைத்தே பூமியின் பலனைச் சாப்பிடுவாய்.

  24. பூமி முற்களையும் முற்புதர்களையும் உனக்கு விளைவிக்கும், வயலின் பயிர்களையே நீ சாப்பிடுவாய்.

  25. நீ புழுதியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ புழுதிக்குத் திரும்பும்வரை, நெற்றி வியர்வை சிந்தியே உன் உணவைச் சாப்பிடுவாய்; நீ புழுதியிலிருந்து உண்டாக்கப்பட்டதால் புழுதிக்கே திரும்புவாய்.”