Judge பற்றிய பைபிள் வசனங்கள்: Character of, and precepts relating to
Character of, and precepts relating to பற்றிய வசனங்கள்
ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.
இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும்.
ஆனால் உங்களுடைய பிரச்சனைகளையும், தாங்கமுடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி?
ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும், மதிப்பும் பெற்றவர்களான சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.
அப்பொழுது நீங்கள், “நீர் முன்வைத்த யோசனை நல்லது” என்று பதிலளித்தீர்கள்.
எனவே நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் நற்பெயரும் கொண்ட மனிதரை உங்கள்மேல் தலைவர்களாய் இருக்கும்படி நியமித்தேன். அவர்களை உங்கள் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துபேருக்கும் தளபதிகளாகவும், கோத்திரங்களுக்கு அதிகாரிகளாகவும் நியமித்தேன்.
அப்பொழுது நான் உங்கள் நீதிபதிகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் சகோதரர்களின் வாக்குவாதங்களைக் கேட்டு நியாயமாக நீதி வழங்குங்கள். அந்த வழக்கு இஸ்ரயேல் சகோதரருக்கு இடையில் இருந்தாலும், ஒரு இஸ்ரயேலனுக்கும், ஒரு அந்நியனுக்கும் இடையில் இருந்தாலும் நியாயமாய் நீதி வழங்குங்கள்.
நீதி வழங்குவதில் பட்சபாதம் காட்டாதீர்கள்; பெரியவர்களையும் சிறியவர்களையும் ஒரேவிதமாய் விசாரணைசெய்யுங்கள். எந்த மனிதனுக்கும் பயப்படவேண்டாம். ஏனெனில் நியாயத்தீர்ப்பு இறைவனுக்கே உரியது. உங்களுக்குக் கடினமாய் உள்ள வழக்குகளையோ என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை நான் விசாரிப்பேன்” என்றேன்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் உங்களுடைய கோத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமென நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமியுங்கள். அவர்கள் மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்புச்செய்யவேண்டும்.
நீதியைப் புரட்டவேண்டாம். பட்சபாதம் காட்டவேண்டாம். இலஞ்சம் வாங்கவேண்டாம். இலஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களைக் குருடாக்கி, நீதியானவர்களின் வார்த்தைகளைத் தாறுமாறாக்குகிறது.
நீதியைப் பின்பற்றுங்கள்; நீதியை மட்டுமே பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
நீங்கள் நியாயந்தீர்க்கக் கடினமான வழக்குகள் உங்கள் நீதிமன்றங்களுக்கு வந்தால், அவை இரத்தம் சிந்துதலோ, சட்ட விவகாரமோ, தாக்குதலோ எதுவாயிருந்தாலும், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோங்கள்.
அங்கே லேவியரான ஆசாரியர்களிடமும், அவ்வேளையில் கடமைசெய்யும் நீதிபதியினிடமும்போய் அவர்களிடம் விசாரியுங்கள். அவர்கள் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்.
யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே அவர்கள் தெரிவிக்கிற தீர்ப்பின்படியே நீங்கள் செயல்படவேண்டும்.
செய்யும்படி அவர்கள் உங்களுக்குப் பணிக்கும் ஒவ்வொன்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அவர்கள் உங்களுக்குப் போதிக்கிற சட்டத்தின்படியேயும், அவர்கள் உங்களுக்குக் கொடுக்கிற தீர்மானங்களின்படியேயும் செயற்படுங்கள். அவர்கள் சொல்வதிலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகவேண்டாம்.
ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி, குற்றம் சாட்டுவதற்குத் தீயநோக்கமுள்ள ஒரு சாட்சி துணிந்தால்,
வழக்காடுகிற இருவரும் அந்நாட்களில் அதிகாரம் செலுத்தும் ஆசாரியனின் முன்னும், நீதிபதியின் முன்னும் யெகோவாவின் முன்னிலையில் நிற்கவேண்டும்.
நீதிபதிகள் அவர்களைத் தீர விசாரிக்கவேண்டும். அப்போது சாட்சி சொல்பவன் தன் சகோதரனுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி, அவன் பொய்யன் என நிரூபிக்கப்பட்டால்,
அவன் தன் சகோதரனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைத்தானோ, அதை நீங்கள் அவனுக்கே செய்யவேண்டும். இப்படியாக உங்கள் மத்தியிலிருந்து தீமையை அகற்றவேண்டும்.
மனிதர்களுக்கிடையில் வழக்கு ஏற்படும்போது, அவர்கள் அதை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். நீதிபதிகள் வழக்கை விசாரித்து குற்றமற்றவனை விடுவித்து, குற்றவாளிக்கு தண்டனை வழங்குவார்கள்.
குற்றவாளிக்கு அடிக்கப்படும் தண்டனையே தீர்க்கப்பட்டால், நீதிபதி அவனைக் கீழே கிடத்துவித்து தனது முன்னிலையில் அவனை அடிக்கவேண்டும். அவனுடைய குற்றத்திற்கு ஏற்ற எண்ணிக்கையின்படி கசையடி கொடுக்கவேண்டும்.
ஆனால் அவனை நாற்பது அடிகளுக்குமேல் அடிக்கவேண்டாம். அதற்குமேல் அடிக்கப்பட்டால், உங்கள் சகோதரன் உங்கள் பார்வையில் இழிவாகக் காணப்படுவான்.
அவன் யூதாவிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணங்களில் இருக்கும்படி நாட்டில் நீதிபதிகளை நியமித்தான்.
அவன் அவர்களிடம், “நீங்கள் செய்வதைக்குறித்து கவனமாக யோசனை பண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் மனிதனுக்காக நியாயந்தீர்ப்பதில்லை, யெகோவாவுக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு வழங்கும்போதெல்லாம் அவர் உங்களோடு இருக்கிறார்.
இப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்கள்மேல் இருப்பதாக. கவனமாக நியாயம் தீருங்கள், ஏனெனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடம் அநியாயமோ, பாரபட்சமோ, இலஞ்சம் வாங்குதலோ இல்லை” என்றான்.