Good and Evil பற்றிய பைபிள் வசனங்கள்: Conflict between
Conflict between பற்றிய வசனங்கள்
அதற்குப் பின்பு நான், மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை தவளைகளைப்போல் காணப்பட்டன; அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் பொய் தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் வெளியே வந்தன.
அவை அற்புத அடையாளங்களைச் செய்துகாட்டும் பிசாசுகளின் ஆவிகள்; அவை உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களிடம் புறப்பட்டுச்சென்றன. எல்லாம் வல்ல இறைவனுடைய அந்த மகாநாளில், அவருக்கு எதிராக நடக்கப்போகும் யுத்தத்திற்காக, அவர்களை ஒன்றுசேர்க்கும்படியே அவை சென்றன.
கர்த்தர் சொன்னதாவது, “இதோ, நான் திருடனைப்போல் வருகிறேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது உடைகளை ஆயத்தமாய் வைத்திருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்பொழுது அவன் நிர்வாணமாய் வெளியேப்போய், பகிரங்கமாய் வெட்கத்திற்குட்படமாட்டான்.”
பின்பு அந்த அற்புத அடையாளங்களைச் செய்யும் ஆவிகள், அரசர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்துக்கொண்டு, எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்தன.
ஏழாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்பொழுது ஆலயத்திலிருந்து ஒரு சத்தமான குரல், “செய்தாயிற்று!” என்று அரியணையிலிருந்து கூறியது.
அப்பொழுது மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கங்களும், பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் உண்டான நாளிலிருந்து, அதுபோன்ற பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவ்வளவு பலமாய் அந்தப் பூமியதிர்ச்சி இருந்தது.
மகா நகரமான பாபிலோன், மூன்று பகுதிகளாகப் பிளந்தன. உலக நாடுகளின் நகரங்கள் இடிந்து விழுந்தன. மகா பாபிலோனை இறைவன் மறந்துவிட, இவ்வாறு அவர் தமது கடுங்கோபத்தின் கிண்ணத்திலே, தனது கோபத்தின் திராட்சை மதுவை நிரப்பி அவளுக்குக் கொடுத்தார்.
தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று.
வானத்திலிருந்து பெரும் கல்மழை மனிதர்மேல் விழுந்தது. அதன் கல் ஒவ்வொன்றும் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அப்பொழுது மனிதர், அந்தக் கல்மழையின் வாதையினிமித்தம் இறைவனைச் சபித்தார்கள்; ஏனெனில், அந்த வாதை மிகவும் கொடியதாக இருந்தது.