உள்ளடக்கத்திற்குச் செல்க
எண்ணாகமம் 11:4-15

இறைச்சிக்கான கோரிக்கையும் மோசேயின் விரக்தியும்

எண்ணாகமம் 11:4-15
4
இஸ்ரயேலருடன் இருந்த அந்நியர்கள் எகிப்தின் உணவுக்காக ஆசைகொண்டவர்களானார்கள். இஸ்ரயேலரும் அவர்களுடன் சேர்ந்து புலம்பத் தொடங்கினார்கள். அவர்கள், “சாப்பிட எங்களுக்கு இறைச்சி மட்டுமாவது கிடைக்காதா!
5
எகிப்தில் செலவின்றி நாம் சாப்பிட்ட மீனையும், அத்துடன் வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்கிறோம்.
6
இப்பொழுது நமக்குச் சாப்பிடவே மனமில்லாமல் போனோம். மன்னாவைத் தவிர வேறொன்றையும் காணோமே” என்றார்கள்.
7
மன்னா கொத்தமல்லி விதையைப் போன்றும், பார்வைக்கு வெளிர்மஞ்சள் நிறமாகவும் இருந்தது.
8
மக்கள் சுற்றித்திரிந்து அதைப்பொறுக்கி, அவற்றைத் திரிகையினால் திரித்தோ, உரலில் இடித்தோ மாவாக்கிப் பாத்திரத்திலிட்டு சமைப்பார்கள் அல்லது அடை அப்பங்களாகச் சுடுவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவைப்போல் இருந்தது.
9
இரவில் முகாமின்மேல் பனிபெய்து அது படியும்போதெல்லாம் அதனுடன் மன்னாவும் கீழே விழும்.
10
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் முந்திய உணவில் விருப்பங்கொண்டு, தங்கள் கூடாரவாசலில் நின்று இவ்வாறு அழுவதை மோசே கேட்டான். யெகோவா மிகவும் கோபம்கொண்டார். மோசேயும் கலக்கம் அடைந்தான்.
11
எனவே மோசே யெகோவாவிடம், “உமது அடியேன்மேல் ஏன் இவ்வளவு கஷ்டத்தைச் சுமத்தினீர். இந்த மக்கள் எல்லோரினது பாரத்தையும் என்மேல் சுமத்துவதற்கு நான் உமக்கு விரோதமாக எதைச்செய்தேன்?
12
இந்த மக்களையெல்லாம் நானா கர்ப்பந்தரித்தேன்? இவர்களை நானா பெற்றெடுத்தேன்? ஒரு தாதி ஒரு குழந்தையைச் சுமப்பதுபோல், இவர்கள் முற்பிதாக்களுக்கு நீர் வாக்குக்கொடுத்த நாட்டிற்கு இவர்களை என் கைகளினால் சுமந்துகொண்டுச் செல்லும்படி ஏன் சொல்கிறீர்?
13
இந்த மக்கள் எல்லோருக்கும் இறைச்சிகொடுக்க நான் எங்கே போவேன்? ‘எங்களுக்குச் சாப்பிட இறைச்சியைக் கொடு’ என இவர்கள் என்னிடம் கேட்டு, அழுகிறார்களே.
14
இந்த மக்கள் எல்லோரையும் தனியே சுமக்க என்னால் முடியாது. இந்தச் சுமை எனக்கு அதிக பாரமாயிருக்கிறது.
15
இவ்விதமாகவே நீர் என்னை நடத்துவீர் என்றால் என்னை இப்பொழுது கொன்றுவிடும். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நானே என் சொந்த அழிவைக் காணாதபடி என்னைக் கொன்றுபோடும்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options