மத்தேயு 21:33-45
33
“மேலும் ஒரு உவமையைக் கேளுங்கள்: நிலத்தின் உரிமையாளன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, பழங்களைப் பிழியும் தொட்டியையும் ஒரு காவல் கோபுரத்தையும் கட்டினான். பின்பு அவன், அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டான்.
34
அறுவடைக்காலம் வந்தபோது, அவன் தனது வேலைக்காரர்களிடம் தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி குத்தகைக்காரரிடம் அனுப்பினான்.
35
“குத்தகைக்காரர்களோ அவனுடைய வேலையாட்களைப் பிடித்து, ஒருவனை அடித்து, இன்னொருவனைக் கொலைசெய்து, மற்றவனைக் கல்லால் எறிந்தார்கள்.
36
பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பினவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, அவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள்.
37
அவன், ‘தன் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, தன் மகனை கடைசியாக அவர்களிடம் அனுப்பினான்.
38
“ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளன். வாருங்கள், இவனைக் கொலைசெய்து, இவனுடைய உரிமைச்சொத்தை நாம் எடுத்துக்கொள்வோம்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
39
அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.
40
“ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளன் வரும்போது, அந்த குத்தகைக்காரரை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார்.
41
அதற்கு அவர்கள், “அவன் அந்தக் கொடியவர்களை கொடுமையாக அழித்துப் போட்டு திராட்சைத் தோட்டத்தையும் அறுவடைக்காலத்தில் விளைச்சலில் தனக்குரிய பங்கைத் தனக்குக் கொடுக்கக்கூடிய, வேறு குத்தகைக்காரருக்குக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள்.
42
இயேசு அவர்களிடம், “ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’ என்ற நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43
“ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்படும். அது அதற்கேற்ற கனிகொடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படும்.
44
இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
45
தலைமை ஆசாரியர்களும், பரிசேயரும் இயேசுவின் உவமையைக் கேட்டபோது, அவர் தங்களைக் குறித்தே பேசுகிறார் என்று அறிந்துகொண்டார்கள்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings