மாற்கு 6:38-56
38
இயேசு அவர்களிடம், “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன என்று போய்ப் பாருங்கள்” என்றார். சீடர்கள் விசாரித்துப் பார்த்து, “ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
39
அப்பொழுது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார்.
40
அப்படியே அவர்கள் நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள்.
41
இயேசு அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணார்ந்துப் பார்த்து, நன்றி செலுத்தி அப்பங்களைப் பிட்டார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்.
42
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
43
மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் சீடர்கள் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
44
சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாய் இருந்தது.
45
பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு போகும்படிச் செய்தார்.
46
இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டப் பின்பு, மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார்.
47
இரவு வேளையானபோது, சீடர்கள் ஏறிச்சென்ற படகு நடுக்கடலில் போய்க்கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
48
எதிர்காற்று வீசியபடியால், சீடர்கள் படகைக் கட்டுப்படுத்தக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை இயேசு கண்டார்; அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் அவர்களைக் கடந்துபோகும்போது,
49
இயேசு கடலின்மேல் நடப்பதை அவர்கள் கண்டு, அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள்.
50
ஏனெனில் அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். உடனே இயேசு அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான். பயப்படாதிருங்கள்” என்றார்.
51
பின்பு இயேசு, அவர்களுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டார். அப்பொழுது காற்று அமர்ந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள்.
52
ஏனெனில் அப்பங்களைப் பிட்டு அநேகருக்கு அவர் கொடுத்ததைக் கண்டும், அவர்கள் அதன் கருத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய இருதயங்கள் உணர்வற்று கடினமாயிருந்தன.
53
அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரையைப் பிடித்தார்கள்.
54
அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே, அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
55
அந்தப் பகுதி எங்கும் அவர்கள் ஓடிப்போய், நோயாளிகளைப் படுக்கையின்மேல் கிடத்தி சுமந்துகொண்டு, இயேசு எங்கிருப்பதாகக் கேள்விப்பட்டார்களோ, அங்கெல்லாம் கொண்டுவந்தார்கள்.
56
கிராமங்களிலும், பட்டணங்களிலும், ஊர்களிலும் இயேசு எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் இருந்த சந்தைகூடும் இடங்களில் நோயாளிகளைக் கிடத்தினார்கள். அந்த நோயாளிகள் அவருடைய ஆடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அனுமதிக்கும்படி, அவர்கள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.
Settings