மாற்கு 2:15-21
15
இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
16
பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
17
இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
18
அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
19
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது.
20
ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
21
“யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.”
Settings