மாற்கு 2:13-17
13
மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார்.
14
பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
15
இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
16
பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
17
இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
Settings