Skip to content
நியாயாதிபதிகள் 9:6-22

நியாயாதிபதிகள் 9:6-22

6
அப்பொழுது சீகேமிலும், பெத் மிலோவிலுமுள்ள எல்லா குடிகளும் சீகேமின் தூணின் அருகேயுள்ள பெரிய மரத்தினடியில் அபிமெலேக்கை அரசனாக முடிசூட்டுவதற்காக ஒன்றுகூடி வந்தார்கள்.
7
இதை யோதாம் கேள்விப்பட்டபோது, அவன் கெரிசீம் மலையுச்சியில் ஏறி அவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிட்டு, “சீகேமின் குடிகளே எனக்குச் செவிகொடுங்கள்; அப்பொழுது இறைவன் உங்களுக்குச் செவிகொடுப்பார்.
8
ஒரு நாள் மரங்களெல்லாம் தங்களுக்குள் ஒரு அரசனை நியமிக்கப் போயின. அதன்படி அவை ஒலிவமரத்தைப் பார்த்து, ‘நீ எங்கள் அரசனாயிரு’ என்றன.
9
“ஆனால் ஒலிவ மரமோ, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் கனம்பண்ணப் பயன்படுத்தும் என் எண்ணெயை விட்டு மரங்களுக்கு மேலாக அசைவாடுவேனோ?’ என்று கேட்டது.
10
“பின் மரங்கள் அத்திமரத்திடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
11
“ஆனால் அத்திமரமோ, ‘நான் என் சிறந்த ருசியான பழங்களை விட்டு மரங்களுக்கு மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
12
“அப்பொழுது மரங்கள் திராட்சை செடியிடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
13
“ஆனால் திராட்சைச்செடி, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் உற்சாகமூட்டும் என் இரசத்தைவிட்டு உங்கள் மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
14
“கடைசியாக எல்லா மரங்களும் சேர்ந்து முட்செடியிடம், ‘நீ வந்து எங்கள் அரசனாயிரு’ என்றன.
15
“அதற்கு முட்செடி மரங்களிடம், ‘நீங்கள் என்னை அரசனாக அபிஷேகம் பண்ணுவது உண்மையானால், எல்லோரும் வந்து என் நிழலில் அடைக்கலம் புகுந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து நெருப்பு வந்து லெபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும்’ என்றது.
16
“இப்பொழுதும் நீங்கள் அபிமெலேக்கை அரசனாக்கியபோது, உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டீர்களோ? யெருபாகாலுக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் நீங்கள் செய்தது சரியானதா? நீங்கள் எனது தகப்பனுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பை கொடுத்தீர்களா?
17
எனது தகப்பன் உங்களுக்காகச் சண்டையிட்டு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், மீதியானியரின் கையிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
18
ஆனால் இன்று நீங்களோ எனது தகப்பனின் குடும்பத்திற்கு எதிராகக் கலகம்செய்து, அவரது மகன்கள் எழுபதுபேரையும் ஒரு கல்லின்மேல் கொலைசெய்தீர்கள். அவரது அடிமைப்பெண்ணின் மகன் அபிமெலேக்கை, உங்கள் சகோதரனாகையால் சீகேமின் குடிகளுக்கு மேலாக அரசனாக்கியிருக்கிறீர்கள்.
19
நீங்களோ யெருபாகாலுடனும் அவனின் குடும்பத்துடனும் நேர்மையாகவும், உண்மையாகவும் இன்று நடந்திருந்தால், உங்களுக்காக அபிமெலேக்கு உங்கள் மகிழ்ச்சியாயிருக்கட்டும். நீங்களும் அவனின் மகிழ்ச்சியாய் இருங்கள்.
20
அப்படியில்லையானால் அபிமெலேக்கிலிருந்து நெருப்பு எழும்பி உங்களையும், சீகேமின் குடிகளையும் பெத் மிலோனின் குடிகளையும் எரித்துப்போடட்டும். உங்களிலிருந்தும், சீகேமின் குடிகளிலிருந்தும், பெத்மில்லோன் குடிகளிலிருந்தும் நெருப்பு எழும்பி, அபிமெலேக்கையும் எரித்துப்போடட்டும்” என்று சொல்லி முடித்தான்.
21
அவற்றைச் சொன்னபின்பு யோதாம் தன் சகோதரன் அபிமெலேக்கிற்கு பயந்ததினால் தான் இருந்த இடத்தைவிட்டு பேயேர் என்னும் இடத்திற்குத் தப்பி ஓடி அங்கே இருந்தான்.
22
அபிமெலேக்கு இஸ்ரயேலை மூன்று வருடங்கள் அரசாண்டான்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options