Skip to content
யோசுவா 24:2-13

தேவன் தமது செயல்களை நினைவுபடுத்துதல்

யோசுவா 24:2-13
2
அப்பொழுது யோசுவா மக்கள் அனைவருக்கும் கூறியதாவது, “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: முற்காலத்தில் உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாமுக்கும், நாகோருக்கும் தகப்பனாகிய தேராகு என்பவன் யூப்ரட்டீஸ் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் பிற தெய்வங்களை வணங்கினார்கள்.
3
ஆனால் நான் உங்கள் பிதாவாகிய ஆபிரகாமை யூப்ரட்டீஸ் நதியின் அப்பாலுள்ள நாட்டிலிருந்து தெரிந்தெடுத்து, கானான்நாடெங்கும் வழிநடத்தி, அவனுக்குப் பல வழித்தோன்றல்களைக் கொடுத்தேன். அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்,
4
ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கொடுத்தேன். சேயீர் என்னும் மலைநாட்டை நான் ஏசாவுக்குக் கொடுத்தேன். ஆனால் யாக்கோபும் அவன் மகன்களும் எகிப்திற்குப் போனார்கள்.
5
“ ‘அதன்பின் நான் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி, அங்கே நான் செய்த செயல்களினால் எகிப்தியரைத் துன்புறுத்தி உங்களை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தேன்.
6
அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர்கள் கடலண்டைக்கு வந்தார்கள். எகிப்தியர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து இரதங்களோடும், குதிரைகளோடும் செங்கடல்வரை துரத்தி வந்தார்கள்.
7
அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.
8
“ ‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள்.
9
அடுத்து சிப்போரின் மகனும் மோவாப் தேசத்தின் அரசனுமாகிய பாலாக், இஸ்ரயேலருக்கு விரோதமாகப் போரிட ஆயத்தமானபோது, அவன் உங்களைச் சபிக்கும்படி பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான்.
10
ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன்.
11
“ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
12
நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை.
13
இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options