எரேமியா 5:1-9
1
எருசலேமின் வீதிகளில் அங்கும் இங்கும் போய், சுற்றிப் பார்த்துக் கவனியுங்கள். அதன் பொது சதுக்கங்களில் தேடிப் பாருங்கள். நேர்மையாய் நடந்து, உண்மையை விரும்புகிற ஒரு மனிதனையாவது உங்களால் காணமுடியுமானால், நான் இந்தப் பட்டணத்தை மன்னிப்பேன்.
2
“யெகோவா இருப்பது நிச்சயமெனில்” என்று அவர்கள் சொன்னாலும், அவர்கள் இன்னும் பொய் சத்தியம் செய்கிறார்கள்.
3
யெகோவாவே, உம்முடைய கண்கள் உண்மையைத் தேடவில்லையா? நீர் அவர்களை அடித்தீர். அவர்கள் அதன் வலியை உணரவில்லை. நீர் அவர்களை நசுக்கினீர். ஆனால் அவர்கள் திருந்துவதற்கு மறுத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் முகங்களைக் கல்லைவிட கடினமாக்கி, மனந்திரும்ப மறுத்துவிட்டார்கள்.
4
“இவர்கள் ஏழைகளும் மூடர்களுமானவர்கள் என்று நான் நினைத்தேன். இவர்கள் யெகோவாவின் வழியையோ தங்கள் இறைவனுடைய நியமங்களையோ அறியாதவர்கள்.
5
ஆகவே நான் தலைவர்களிடம்போய் அவர்களோடு பேசுவேன்; நிச்சயமாக அவர்கள் யெகோவாவின் வழியையும், தங்கள் இறைவனின் நியமங்களையும் அறிந்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்களுங்கூட ஒருமனதாய் நுகத்தை முறித்து, கட்டுகளை அறுத்துப் போட்டார்கள்.
6
இதனால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களை தாக்கும், பாலைவனத்து ஓநாய் அவர்களைப் பாழ்படுத்தும். அவர்களுடைய பட்டணங்களின் அருகே சிறுத்தைப் பதுங்கிக் காத்திருந்து, அது வெளியேவரும் எவனையும் துண்டுதுண்டாய் கிழித்துப்போடும். ஏனெனில் அவர்களின் கலகம் பெரிதாயும் அவர்களின் பின்மாற்றங்கள் அதிகமாயும் உள்ளன.
7
“நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன்னுடைய பிள்ளைகள் என்னைக் கைவிட்டு விட்டார்கள், தெய்வங்கள் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் பண்ணுகிறார்கள். நான் அவர்களுடைய தேவைகளைப் பூரணமாகக் கொடுத்திருந்தேன், ஆயினும் அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். ஒரு பெரும் கூட்டமாய் வேசிகளின் வீடுகளுக்குப் போனார்கள்.
8
அவர்கள் கொழுமையாய் வளர்க்கப்பட்ட ஆண் குதிரைகளைப்போல், ஒவ்வொருவனும் அயலவனின் மனைவியின்மேல் ஆசைகொள்கிறான்.
9
இதற்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “இப்படிப்பட்டவர்களை நான் பழிவாங்க வேண்டாமோ?
Settings