Skip to content
ஏசாயா 40:1-11

ஏசாயா 40:1-11

1
என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், என உங்கள் இறைவன் சொல்கிறார்.
2
எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள், அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது; அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது; அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும் இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.
3
ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: “பாலைவனத்தில் யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.
4
ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும், கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.
5
யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும். யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
6
“உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன். “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள், அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
7
யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, பூக்களும் உதிர்கின்றன; நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள்.
8
புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
9
சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு. எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு. பயப்படாதே, குரலை எழுப்பு; “இதோ உங்கள் இறைவன்!” என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல்.
10
இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்; அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும். அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது, அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.
11
அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்: அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி, மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்; அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options