யோசேப்பு தன் குடும்பத்தாரை பார்வோனிடம் அழைத்துச் செல்லுதல்
ஆதியாகமம் 47:1-12
1
யோசேப்பு பார்வோனிடம் சென்று, “என் தகப்பனும் என் சகோதரரும் தங்களுடைய ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும், அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் கானான் நாட்டிலிருந்து வந்து, இப்பொழுது கோசேனில் தங்கியிருக்கிறார்கள்” என்றான்.
2
அவன் தன் சகோதரரில் ஐந்துபேரைத் தெரிந்தெடுத்து, அவர்களைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான்.
3
அப்பொழுது பார்வோன் அந்தச் சகோதரர்களிடம், “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போலவே மந்தை மேய்ப்பவர்கள்” என்றார்கள்.
4
மேலும் அவர்கள் பார்வோனிடம், “கானான் நாட்டில் பஞ்சம் கொடியதாய் இருப்பதால், உமது அடியாரின் மந்தைக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. ஆகையால், தயவுசெய்து உமது அடியாராகிய எங்களைக் கோசேனில் குடியிருக்க அனுமதியும்” என்றார்கள்.
5
அதற்குப் பார்வோன் யோசேப்பிடம், “உன் தகப்பனும் சகோதரரும் உன்னிடம் வந்திருக்கிறார்கள்.
6
இதோ, எகிப்து நாடு உனக்கு முன்பாக இருக்கிறது; உன் தகப்பனையும், சகோதரரையும் நாட்டின் சிறந்த இடத்தில் குடியமர்த்து. அவர்கள் கோசேனில் குடியிருக்கட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் இருப்பார்களானால், அவர்கள் என் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொறுப்பாய் இருக்கட்டும்” என்றான்.
7
பின்பு யோசேப்பு தன் தகப்பன் யாக்கோபைப் பார்வோனுக்கு முன்பாகக் கூட்டிக்கொண்டு வந்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
8
பார்வோன் யாக்கோபிடம், “உம்முடைய வயது என்ன?” என்று கேட்டான்.
9
அதற்கு யாக்கோபு பார்வோனிடம், “என் வாழ்க்கைப் பயணம் நூற்று முப்பது வருடங்கள். என் வருடங்கள் என் முற்பிதாக்களின் வாழ்க்கைப் பயணத்தின் வருடங்களுக்குச் சமமானது அல்ல; அவை குறைவானதும், கஷ்டமானதுமாய் இருந்தன” என்றான்.
10
பின்பு யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
11
பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனையும், சகோதரரையும் எகிப்தில் குடியேற்றி, நாட்டின் சிறந்த இடமான ராமசேஸ் என்னும் மாவட்டத்தில் அவர்களுக்கு நிலம் கொடுத்தான்.
12
யோசேப்பு தன் தகப்பனுக்கும், சகோதரருக்கும், தன் தகப்பன் வீட்டார் அனைவருக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி உணவையும் வழங்கி வந்தான்.
Settings