ஆதியாகமம் 38:18-26
18
அதற்கு யூதா, “உனக்கு அடைமானமாக நான் என்ன தரவேண்டும்?” என்று கேட்டான். அதற்குத் தாமார், “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், அதன் கயிற்றையும், உமது கையிலிருக்கும் கோலையும் தாரும்” என்றாள். அவன் அவற்றைக் கொடுத்து, அவளுடன் உறவுகொண்டான்; அவனால் அவள் கர்ப்பவதியானாள்.
19
அவள் அவ்விடத்தை விட்டுப்போய், தன் முகத்திரையைக் கழற்றிவிட்டு, மறுபடியும் தனது விதவைக்குரிய உடைகளை உடுத்திக்கொண்டாள்.
20
அதேவேளை யூதா அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து, தான் அப்பெண்ணிடம் அடைமானமாகக் கொடுத்திருந்த பொருட்களை வாங்கிவரும்படி அனுப்பினான்; ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
21
அவன் அங்குள்ள மனிதரிடம், “ஏனாயீம் வழியருகே இருந்த கோயில் வேசி எங்கே?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அப்படியொரு கோயில் வேசி இங்கே இல்லை” என்றார்கள்.
22
ஆகவே, அவன் யூதாவிடம், “திரும்பிப்போய், நான் அவளைக் காணவில்லை; அதுவுமல்லாமல் அங்குள்ள மனிதரும், ‘அப்படியொரு கோயில் வேசி அங்கிருக்கவில்லை’ என்று சொன்னார்கள்” என்றான்.
23
யூதா அவனிடம், “அவளிடம் இருப்பதை அவளே வைத்துக்கொள்ளட்டும்; திரும்பிப் போனால் நாம் கேலிப் பொருளாவோம். எப்படியும் நான் இந்த ஆட்டுக்குட்டியை அவளிடம் அனுப்பினேன், ஆனால் நீயோ அவளைக் காண முடியவில்லை” என்றான்.
24
ஏறக்குறைய மூன்று மாதம் சென்றபின், “உமது மருமகள் தாமார், வேசித்தனம் செய்து, அதன் பலனாகக் கருவுற்றிருக்கிறாள்” என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு யூதா, “அவளை வெளியே கொண்டுவந்து எரித்துக் கொல்லுங்கள்!” என்றான்.
25
அவள் வெளியே கொண்டுவரப்படும்போது, தன் மாமனுக்கு ஒரு செய்தியை அனுப்பினாள். அதாவது: “இந்தப் பொருளுக்குரியவராலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும், இடைவாரும், கைக்கோலும் யாருடையது என்று உம்மால் சொல்லமுடியுமா பாரும்” என்று கேட்கும்படி அனுப்பினாள்.
26
யூதா அவற்றை அடையாளம் கண்டு, “என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்க மறுத்தபடியால், அவள் என்னைவிட நீதியானவளே” என்றான். அதன்பின் யூதா அவளுடன் உறவுகொள்ளவில்லை.
Settings