யாத்திராகமம் 28:5-29
5
அவர்கள் தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு நூல்களை பயன்படுத்த வேண்டும்.
6
“தங்கத்தையும், நீலநூலையும், ஊதா நூலையும், கருஞ்சிவப்பு நூலையும், திரிக்கப்பட்ட மென்பட்டையும் கொண்டு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாய் ஏபோத்தைச் செய்யவேண்டும்.
7
அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரண்டு முனைகளிலும் தோளுக்கான இரண்டு பட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
8
அதன் நுட்பமாக நெய்யப்பட்ட அதன் இடைப்பட்டியும் அதைப் போலவே இருக்கவேண்டும். அது ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் செய்யப்படவேண்டும்.
9
“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து அவற்றில் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கு.
10
அவர்கள் பிறந்த வரிசையின்படியே ஆறு மகன்களின் பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு மகன்களின் பெயர்கள் மற்றொரு கல்லிலும் செதுக்கப்பட வேண்டும்.
11
இரத்தினங்களில் முத்திரையை வெட்டிச் செய்வதுபோல், அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கி வைக்கவேண்டும். பின்பு அந்தக் கற்களை தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதிக்கவேண்டும்.
12
பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களின் ஞாபகார்த்தக் கற்களாக ஏபோத்தின் தோள் துண்டுகளில் கட்டவேண்டும். ஆரோன் இந்தப் பெயர்களை யெகோவாவுக்கு முன்பாக ஒரு ஞாபகார்த்தமாய் தன் தோள்களில் சுமக்கவேண்டும்.
13
தங்கச்சரிகை வேலைப்பாடுகளைச் செய்து,
14
அத்துடன் சுத்தத் தங்கத்தினால் கயிறுபோல பின்னப்பட்ட இரண்டு சங்கிலிகளைச் செய்து, அவற்றை அந்தச் சரிகை வேலைப்பாட்டுடன் தொடுத்துக்கொள்ள வேண்டும்.
15
“திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக தீர்மானங்கள் எடுப்பதற்கான ஒரு மார்பு அணியைச் செய்யவேண்டும். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அதைச் செய்யவேண்டும்.
16
அது ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் கொண்ட சதுரமாகவும், இரண்டாக மடிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
17
அதன்மேல் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதிக்கவேண்டும். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்;
18
இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்;
19
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி;
20
நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருக்கவேண்டும். அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்து வைக்கவேண்டும்.
21
இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட வேண்டும்.
22
“மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும்.
23
அதற்காக இரண்டு தங்க வளையங்களைச் செய்து மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும்.
24
அந்த இரண்டு தங்கச்சங்கிலிகளையும் மார்பு அணியின் மூலைகளிலுள்ள இரண்டு வளையங்களோடு தொடுக்கவேண்டும்.
25
சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும் ஏபோத்தின் முன்பக்கத்தில் உள்ள தோள்பட்டியுடன் இணைந்திருக்கும் சரிகை வேலைப்பாடுகளுடன் தொடுக்கவேண்டும்.
26
இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்துடன் ஒட்டியிருக்கும் மார்பு அணியின் உட்புற விளிம்பில், இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும்.
27
வேறு இரண்டு தங்க வளையங்களைச் செய்து, ஏபோத்திலுள்ள இடைப்பட்டிக்கு மேலாக உள்ள இணைப்புக்குச் சமீபமாய், ஏபோத்தின் முன்பக்கத்தில் இருக்கிற தோள்பட்டிகளின் அடிப்பக்கத்தில் தொடுக்கவேண்டும்.
28
மார்பு அணி ஏபோத்தில் இருந்து விலகாதபடி, அதை இடைப்பட்டியுடன் இணைத்து, மார்பு அணியின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களுடன் நீலநிற நாடாவினால் இணைத்துக் கட்டவேண்டும்.
29
“ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதெல்லாம், இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை தன் இருதயத்திற்கு மேலுள்ள தீர்மானத்திற்கான மார்பு அணியின்மேல் நிரந்தரமான ஒரு ஞாபகச்சின்னமாக, யெகோவாவுக்குமுன் சுமப்பான்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings