அப்போஸ்தலர் 18:1-11
1
இதற்குப் பின்பு, பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்குப் போனான்.
2
அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான்.
3
அவர்களைப் போலவே, தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், பவுலும் அவர்களுடன் தங்கி வேலைசெய்தான்.
4
ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவன் ஜெப ஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சித்தான்.
5
சீலாவும், தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்ததும், பவுல் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டான். இயேசுவே கிறிஸ்து என்று அவன் யூதருக்குச் சாட்சி கூறினான்.
6
ஆனால் யூதர்கள் பவுலை எதிர்த்து அவனை நிந்தித்தபோது, அவர்களுக்கு எதிராக அவன் தன் உடைகளை உதறி, அவர்களைப் பார்த்து, “உங்கள் அழிவின் இரத்தப்பழி உங்கள் தலைகளின் மேலேயே இருக்கட்டும்! எனது கடமையிலிருந்து நான் நீங்கலாயிருக்கிறேன். இப்பொழுதிலிருந்து நான் யூதரல்லாத மக்களிடம் போகிறேன்” என்றான்.
7
பின்பு பவுல் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, பக்கத்திலுள்ள தீத்து யுஸ்து என்பவனுடைய வீட்டுக்குப் போனான். அவன் இறைவனை ஆராதிக்கிறவனாய் இருந்தான்.
8
ஜெப ஆலயத் தலைவனான கிறிஸ்புவும், அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்; பவுல் சொன்னதைக் கேட்ட அநேக கொரிந்தியரும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றார்கள்.
9
ஒரு இரவில் கர்த்தர் பவுலுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவர் அவனிடம்: “பயப்படாதே, பேசிக்கொண்டேயிரு, மவுனமாயிராதே.
10
ஏனெனில், நான் உன்னுடனேகூட இருக்கிறேன். ஒருவனும் உன்னைத் தாக்கப்போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் எனக்குரிய அநேக மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.
11
எனவே, பவுல் அங்கே ஒன்றரை வருடமாகத் தங்கியிருந்து, அவர்களுக்கு இறைவனுடைய வார்த்தையைப் போதித்தான்.
Settings