Skip to content
2 இராஜாக்கள் 17:25-41

2 இராஜாக்கள் 17:25-41

25
அவர்கள் முதன்முதலாக அங்கு வந்து வாழ்ந்தபோது யெகோவாவை வழிபடவில்லை. அதனால் யெகோவா அவர்களின் மத்தியில் சிங்கங்களை அனுப்பினார். அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன.
26
அப்பொழுது, “நீர் நாடுகடத்தி சமாரியா பட்டணங்களில் குடியேற்றிய மக்களுக்கு, இந்த நாட்டின் தெய்வத்தை எப்படி வழிபடவேண்டுமென்று தெரியவில்லை. இந்த நாட்டு தெய்வத்திற்கு என்ன செய்யவேண்டும் என்று அறியாதபடியால் அவர் சிங்கங்களை அவர்கள் மத்தியில் அனுப்பியிருக்கிறார். அவை அவர்களைக் கொல்கின்றன” என்று அசீரிய அரசனுக்கு அறிவிக்கப்பட்டது.
27
அப்பொழுது அசீரிய அரசன் அவர்களிடம், “சமாரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆசாரியர்களில் ஒருவனை அங்கு வாழ்வதற்காகத் திரும்பக் கூட்டிக்கொண்டு போங்கள். அவன் அங்கு வசித்து அந்நாட்டின் தெய்வத்தை எப்படி வணங்க வேண்டுமென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
28
அவ்வாறே சமாரியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆசாரியர்களில் ஒருவன் பெத்தேலுக்கு வந்து அங்கே வாழ்ந்து அவர்களுக்கு யெகோவாவை எப்படி வழிபடவேண்டுமென்று கற்பித்தான்.
29
ஆனாலும் ஒவ்வொரு நாட்டினரின் மக்கள் குழுவும் தாங்கள் குடியமர்த்தப்பட்ட அநேக பட்டணங்களில், அவரவருடைய சொந்த தெய்வங்களை உருவாக்கி சமாரியரினால் கட்டப்பட்ட உயரமான வழிபாட்டு மேடைகளிலும், கோயில்களிலும் அவற்றை வைத்தார்கள்.
30
பாபிலோன் பட்டண மனிதர் சுக்கோத் பெனோத் தெய்வத்தையும், கூத் பட்டணத்து மனிதர் நேர்கால் தெய்வத்தையும், ஆமாத் பட்டணத்து மனிதர் அசிமா தெய்வத்தையும்,
31
ஆவீம் பட்டணத்து மனிதர் நிபேகாஸ் தெய்வத்தையும், தர்காக் தெய்வத்தையும் உருவங்களாகச் செய்தனர். செப்பர்வியர் தங்கள் செப்பர்வாயிமின் தெய்வங்களான அத்ரமெலேக்கு, அன்னமெலேக்கு என்னும் தெய்வங்களுக்கு தங்கள் பிள்ளைகளையும் நெருப்பில் பலி செலுத்தினார்கள்.
32
அவர்கள் யெகோவாவை வழிபட்டார்கள். ஆனாலும், வழிபாட்டு மேடைகளிலுள்ள கோவில்களில் தங்கள் பூசாரிகளாகப் பணிசெய்வதற்கு தங்கள் மக்களிலிருந்து பலதரப்பட்டவர்களையும் நியமித்தார்கள்.
33
அவர்கள் யெகோவாவை வழிபட்டாலும், தாங்கள் விட்டுவந்த நாட்டினரின் முறைகளுக்கேற்ப தங்கள் சொந்தத் தெய்வங்களுக்கும் பணிசெய்து வந்தார்கள்.
34
அவர்கள் இன்றுவரை தங்கள் முந்தைய கிரியைகளுக்கேற்றபடியே செய்து வருகிறார்கள். ஆனால் யெகோவாவை உண்மையாக வழிபடவோ, அவர் இஸ்ரயேல் என்று பெயரிட்ட யாக்கோபின் சந்ததிகளுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவோ இல்லை.
35
யெகோவா இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்தபோது அவர்களிடம், “நீங்கள் வேறு தெய்வங்களை வழிபடவோ, தலைவணங்கவோ, அவைகளுக்குப் பணிசெய்யவோ, பலி செலுத்தவோ வேண்டாம்.
36
எகிப்திலிருந்து பலத்த ஆற்றலினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் உங்களைக் கொண்டுவந்த யெகோவாவையே நீங்கள் வழிபடவேண்டும். அவரை வணங்கி அவருக்கு மட்டுமே பலிசெலுத்தவேண்டும்.
37
அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த விதிமுறைகளையும், ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் நீங்கள் எப்பொழுதும் கைக்கொள்ளக் கவனமாயிருக்க வேண்டும். வேறு தெய்வங்களை வழிபட வேண்டாம்.
38
நான் உங்களுடன் செய்த உடன்படிக்கையை மறவாமலும், வேறு தெய்வங்களை வழிபடாமலும் இருங்கள்.
39
அதற்குப் பதிலாக உங்கள் இறைவனாகிய யெகோவாவை மட்டுமே வழிபடுங்கள். அவரே உங்களுடைய எல்லாப் பகைவர்களின் கையிலிருந்தும் உங்களை விடுதலையாக்குவார்” என்று கட்டளையிட்டிருந்தார்.
40
ஆனாலும் அவர்களோ செவிகொடுக்காமல் தொடர்ந்து தங்கள் பழைய வழக்கங்களையே செய்துவந்தார்கள்.
41
இந்த மக்கள் யெகோவாவை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே தங்கள் விக்கிரகங்களுக்கும் பணிசெய்தார்கள். இன்றுவரை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோல அவர்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options