1 சாமுயேல் 27:1-7
1
அதன்பின் தாவீது, “நான் சவுலின் கையினால் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் அழிக்கப்படுவேன். எனவே பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பி ஓடிப்போவது தான் நான் செய்யக்கூடிய புத்தியான செயல். அப்பொழுது சவுல் இஸ்ரயேலில் எங்கேயும் என்னைத் தேடுவதைக் கைவிடுவான். நான் அவனுடைய கையிலிருந்து தப்பிவிடலாம்” என நினைத்தான்.
2
எனவே தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு மனிதரும் காத் அரசனான மாயோகின் மகன் ஆகீஸிடம் போனார்கள்.
3
தாவீதும் அவன் மனிதரும் ஆகீஸுடன் காத் பட்டணத்தில் தங்கியிருந்தார்கள். ஒவ்வொருவனும் தன்தன் குடும்பத்துடன் இருந்தான். தாவீது தன் இரு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமுடனும், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையான அபிகாயிலுடனும் இருந்தான்.
4
தாவீது காத் ஊருக்குப் போனதைக் கேள்விப்பட்டவுடன் சவுல் அவனைத் தேடுவதை நிறுத்தினான்.
5
அப்பொழுது தாவீது ஆகீஸிடம், “என்னிடம் உமக்குத் தயவு இருந்தால் நான் வாழ்வதற்கு உம்முடைய நாட்டுப்புறப் பட்டணங்களில் ஒன்றை ஒதுக்கித் தாரும். உமது அடியானாகிய நான் உமது அரசருக்குரிய நகரத்தில் உம்முடன் ஏன் வாழவேண்டும்” என்றான்.
6
அன்றையதினம் ஆகீஸ் சிக்லாக் என்னுமிடத்தை அவனுக்குக் கொடுத்தான். அதனால் சிக்லாக் அன்றிலிருந்து யூதாவின் அரசர்களுக்கு சொந்தமாயிற்று.
7
இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஒரு வருடமும், நாலு மாதங்களும் தங்கியிருந்தான்.
Settings