1 இராஜாக்கள் 6:14-28
14
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
15
உட்புறச் சுவர்களைக் கேதுரு மரப்பலகைகளினால் தளத்திலிருந்து உட்கூரைவரை மூடினான். ஆலயத்தின் தளத்தை மூடுவதற்காக தேவதாரு பலகைகளைப் பதித்தான்.
16
ஆலயத்தில் உள்ள பிற்பகுதியிலிருந்து இருபதுமுழ தூரத்தைப் பிரித்தெடுத்து, நிலத்திலிருந்து உட்கூரைவரை கேதுருமரப் பலகைகளை நிறுத்தி ஆலயத்தின் உள்ளே ஒரு அறையை ஏற்படுத்தினான். அது உள் பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடமாகும்.
17
இந்த அறையின் முன் இருந்த பிரதான மண்டபம் நாற்பது முழ நீளமாயிருந்தது.
18
ஆலயத்தின் உட்புறம் முழுவதிலும் கேதுரு மரப்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அவற்றின் இணைப்பில் விரிந்த பூக்களும், வெள்ளரிக்காய்களும் சித்திர வேலைப்பாடாகச் செதுக்கப்பட்டிருந்தன. எல்லாம் கேதுருமரப் பலகையாகவே இருந்தன. ஒரு கல்லும் வெளியே தெரியவில்லை.
19
ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடத்தை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென சாலொமோன் ஆயத்தம் பண்ணினான்.
20
உட்புற பரிசுத்த இடம் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தது. அதன் உட்புறம் முழுவதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் கேதுருமரப் பலிபீடத்தையும் தங்கத் தகட்டினால் மூடினான்.
21
பின்பு சாலொமோன் ஆலயத்தின் உட்பகுதியை சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, பரிசுத்த இடத்துக்கு முன்பாக தங்கச் சங்கிலிகளை நீளமாக குறுக்கே தொங்கும்படி அமைத்தான். அதுவும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தது.
22
இவ்விதமாய் உட்புறம் முழுவதையும் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் உட்புற பரிசுத்த இடத்துக்குரிய பலிபீடத்தையும் தங்கத்தகட்டால் மூடினான்.
23
உட்புற பரிசுத்த இடத்திலே இரண்டு கேருபீன்களின் உருவத்தைச் செதுக்கி வைத்தான். அவை ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுடையதாக ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டவை.
24
முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், அதன் மறு சிறகு ஐந்து முழமாயும் இருந்தன. ஒரு சிறகின் கடைசிமுனை தொடங்கி மற்ற சிறகின் கடைசி முனைவரை பத்து முழமாய் இருந்தது.
25
இரண்டாவது கேருபீனும் பத்துமுழ அளவாய் இருந்தது. இரண்டு கேருபீன்களும் அளவிலும், வடிவத்திலும் ஒரேவிதமாய் இருந்தன.
26
ஒவ்வொரு கேருபீனும் பத்துமுழ உயரமுடையனவாயிருந்தன.
27
கேருபீன்களை ஆலயத்தின் உட்புற அறையில் வைத்தான். அவற்றின் செட்டைகள் விரிந்தபடியிருந்தன. ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரையும், மற்ற கேருபீனின் சிறகு மற்றச் சுவரையும் தொட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் மற்ற சிறகுகள் அறையின் நடுவில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன.
28
அவன் கேருபீன்களை தங்கத்தகட்டால் மூடியிருந்தான்.
Settings