Jerusalem பற்றிய பைபிள் வசனங்கள்: Roman government transferred from, to Caesarea
Roman government transferred from, to Caesarea பற்றிய வசனங்கள்
அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
அங்கே தலைமை ஆசாரியர்களும், யூதத்தலைவர்களும் அவனிடம் வந்து பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார்கள்.
அவர்கள் பெஸ்துவிடம், தங்களுக்குத் தயவுகாட்டி பவுலை எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவசரமாகக் கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், வழியிலேயே பவுலை மறைந்திருந்து கொல்ல அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன்.
உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அவன் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அங்கேயே அவன்மேல் சுமத்தட்டும்” என்றான்.
அவன் எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு, செசரியாவுக்குப் போனான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான்.
பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து அங்கு வந்த யூதர் அவனைச்சுற்றி நின்றார்கள், அவர்கள் அவன்மேல் மிகவும் கடுமையான, அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியாமல் போயிற்று.
அப்பொழுது பவுல் தன் சார்பாகப் பேசிச் சொன்னதாவது: “நான் யூதருடைய சட்டத்திற்கு எதிராகவோ, ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசன் சீசருக்கு எதிராகவோ, எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்றான்.
பெஸ்து யூதருக்கு தயவுகாட்ட விரும்பியவனாய் பவுலிடம், “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்ய உடன்படுகிறாயா?” என்று கேட்டான்.
அதற்குப் பவுல் அவனிடம், “நான் இப்பொழுது ரோமப் பேரரசனுடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நிற்கின்றேன். இங்கேயே நான் விசாரணை செய்யப்படவேண்டும். நீர் நன்றாய் அறிந்திருக்கிறபடி, நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை.
ஆனால், மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியான ஏதாவது குற்றத்தை நான் செய்திருந்தால், நான் சாவதற்கு மறுக்கவில்லை. ஆனால், எனக்கு எதிராக இந்த யூதரால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவைகளாய் இருக்குமானால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. நான் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்கிறேன்” என்றான்.
பெஸ்து தனது ஆலோசகருடன் கலந்து ஆலோசித்துவிட்டுப் பவுலிடம், “நீ ரோம பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறாய், நீ ரோம பேரரசனிடமே போவாய்” என்றான்.
சில நாட்களுக்குபின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும், பெஸ்துவை வாழ்த்தும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.